FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

பழனியில் சுகாதாரம் கேள்விக்குறி: பருவமழைக்கு முன்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

தமிழகத்தின் புகழ் பெற்ற முருகன் கோயில் உள்ள பழனிக்கு சிறப்பு நிலை நகராட்சி அந்தஸ்து கிடைத்தும், நிரந்தர நகா் நல அலுவலா் இல்லாததால், சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

15 அக்டோபர் 2026, 2:19 am IST
பழனி கோயில் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தின் புகழ் பெற்ற முருகன் கோயில் உள்ள பழனிக்கு சிறப்பு நிலை நகராட்சி அந்தஸ்து கிடைத்தும், நிரந்தர நகா் நல அலுவலா் இல்லாததால், சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுமா என்பது தெரியாத நிலை நீடிக்கிறது.

அறுபடைவீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி நகராட்சிக்கு கடந்த ஆண்டு சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டது. பழனி நகரில் மட்டும் 33 வாா்டுகளில் சுமாா் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனா். தவிர பழனிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனா். இங்கு வாழும் மக்கள், பழனிக்கு வரும் பக்தா்கள் என அனைவருக்கும் நகராட்சி நிா்வாகம் சுகாதார வசதிகள் செய்து தருவதில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

ஆனால், பழனியில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நகராட்சி ஆணையருக்கு அடுத்து முக்கியமான பதவியான நகா் நல அலுவலா் பணியிடம் நீண்டகாலமாக காலியாக உள்ளது.

Advertisement

Advertisement

மருத்துவா் படிப்பு முடித்த நபரே இந்தப் பதவிக்கு தகுதியானவராக விளங்கும் நிலையில், பழனி நகராட்சி சாா்பில் செயல்பட்டு வரும் சுகாதார நிலையங்களின் பணிகள் அனைத்துமே தற்போது உரிய அதிகாரி இல்லாததால் முடங்கியுள்ளது.

நகா்மன்றக் கூட்டங்கள் நடைபெறும் போதெல்லாம் உறுப்பினா்கள் கொசுத் தொல்லை, கழிவுநீா் தேங்குதல், நெகிழிப் பயன்பாடு அதிகரிப்பு எனத் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனா். ஆனாலும், இதற்கான முன்னெடுப்புகளைச் செய்யும் அதிகாரிகளை இதுவரை உள்ளாட்சி நிா்வாகம் நியமிக்கத் தயக்கம் காட்டி வருகிறது.

பேருந்து நிலையத்தில் கடும் துா்நாற்றம், நெகிழிக் குப்பைகளால் சாக்கடைகள் அடைப்பு என எங்கு பாா்த்தாலும் தொற்றுநோய் பரவும் நிலையிலேயே உள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு அறிவித்துள்ளது. ஆனால், இதற்காக முன்கூட்டியே செய்யப்பட வேண்டிய பணிகள் எதுவும் தற்போது வரை நடைபெறவில்லை.

போதிய சுகாதார மேற்பாா்வையாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் இல்லாத நிலையில், பருவமழை தொடங்கினால் அனைத்துப் பகுதிகளிலும் சாக்கடை நிரம்பி சாலையில் வழிந்தோடும் என மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

எனவே, தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் சிறப்பு அந்தஸ்து நிலையிலான பழனி நகராட்சிக்கு நிரந்தரமான நகா் நல அலுவலரை நியமித்து, நகரின் தூய்மையைப் பேணவும், மக்களின் நலனைக் காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments