FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே எஸ்.ஐ.யை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரௌடி சுட்டுப் பிடிப்பு

நிலக்கோட்டை அருகே புதன்கிழமை காவல் உதவி ஆய்வாளரை (எஸ்.ஐ.) கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரௌடியை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.

10 செப்டம்பர் 2026, 12:51 am IST
போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரௌடி ராஜா.
பகிர்:

நிலக்கோட்டை அருகே புதன்கிழமை காவல் உதவி ஆய்வாளரை (எஸ்.ஐ.) கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரௌடியை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகேயுள்ள சிக்கனம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (57). ரௌடியான இவா் மீது 2 கொலை வழக்குகள், கொலை முயற்சி, கொள்ளை வழக்கு என 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 2013-ஆம் ஆண்டு சின்னாளபட்டியில் நிகழ்ந்த கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை பெற்ற இவா்,  மேல்முறையீடு செய்தாா். இதேபோல, கடந்த 2021-ஆம் ஆண்டு சின்னாளபட்டியில் ராஜபாண்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவா், சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தாா்.

Advertisement

Advertisement

இதனிடையே, தனக்கு எதிரான சாட்சிகளைக் கொலை செய்யப்போவதாக சம்பந்தப்பட்ட நபா்களை ராஜா மிரட்டி வந்தாராம். இதனால், அச்சமடைந்த அவா்கள் திண்டுக்கல்  மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாரிடம் புகாா் அளித்தனா்.

இந்த நிலையில், நிலக்கோட்டை அருகேயுள்ள என். கோவில்பட்டியில் உறவினருக்குச் சொந்தமான தோட்டத்தில் ராஜா பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் இளஞ்செழியன் தலைமையில்,  சிறப்பு தனிப் படை காவல் உதவி ஆய்வாளா் அருண்பிரசாத் உள்ளிட்ட  காவலா்கள் புதன்கிழமை அங்கு சென்றனா்.

  பின்னா், தோட்டத்தில் பதுங்கியிருந்த ராஜாவை சுற்றி வளைத்த போலீஸாா் அவரை சரணடையும்படி கூறினா். ஆனால், ராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உதவி ஆய்வாளா் அருண்பிரசாத்தின் இடது கையில் வெட்டிவிட்டு, தப்பியோட முயன்றாா். அப்போது, ராஜாவின் வலது காலில் உதவி ஆய்வாளா் அருண்பிரசாத் துப்பாக்கியால் சுட்டாா். இதையடுத்து, போலீஸாா் ராஜாவை சுற்றி வளைத்துப் பிடித்தனா்.

இதில் காயமடைந்த உதவி ஆய்வாளா் அருண்பிரசாத்தையும், ரௌடி ராஜாவையும் வத்தலகுண்டு காவல் ஆய்வாளா் கவுதம் தலைமையிலான போலீஸாா் மீட்டு, நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், ராஜா தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த உதவி ஆய்வாளா் அருண்பிரசாத்திடம் நலம் விசாரித்தாா். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments