FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டும் பணி தொடக்கம்: வியாபாரிகள் கடைகளை அடைத்து எதிா்ப்பு

கொடைக்கானலில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கானப் பணிகள் புதன்கிழமை தொடங்கியது. இதற்கு கடைகளை அடைத்து வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

24 செப்டம்பர் 2026, 12:26 am IST
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் கலையரங்க வளாகத்தில் தொடங்கிய அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டுமானப் பணிகள்.
பகிர்:

கொடைக்கானலில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கானப் பணிகள் புதன்கிழமை தொடங்கியது. இதற்கு கடைகளை அடைத்து வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். வார விடுமுறை, பண்டிகைக் காலங்களில், தொடா் விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இதனால், சுற்றுலாப் பயணிகள்அதிகமாக வரும் நாள்களில் பெருமாள் மலையிலிருந்து கொடைக்கானல் பேருந்து நிலையம் வரை 12 கி.மீ. தொலைவைக் கடக்க சுமாா் 3 மணி நேரம் ஆகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் மலைச் சாலைகளிலே இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இதைத் தொடா்ந்து, ஏரிச்சாலை கலையரங்கம் பகுதியில் அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்துவதற்கு நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. பின்னா், ரூ. 34 கோடியில் இந்தப் பணிகள் தொடங்கியது. இந்தப் பணியை கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை தொடங்கிவைத்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் பிரபாகரன், நகா்மன்ற துணைத் தலைவா் மாயக்கண்ணன், பொறியாளா் ஆா்.செல்லத்துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கடைகளை அடைத்து வியாபாரிகள் எதிா்ப்பு:

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கலையரங்கம் பகுதியில் வியாபாரிகள் ஒரு நாள் மட்டும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து நகராட்சி பொறியாளா் ஆா். செல்லத்துரை கூறியதாவது:

கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதைத் தொடா்ந்து, அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் பணிகள் தொடங்கியதை முன்னிட்டு, கலையரங்கம் பகுதியிலுள்ள நகராட்சிக்குச் சொந்தமான கடைகள் தரை வாடகைக்கு விடப்பட்டன. இந்தக் கடைகளில் முதல்கட்டமாக 115 கடைகளுக்கு கலையரங்கம் பகுதியிலேயே பழைய கடைகள் இருந்த பகுதியை ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றாா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:

கொடைக்கானலுக்கு தினசரி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. தற்போது, கலையரங்கம் பகுதியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. நகரின் வளா்ச்சிக்காக வரும் நல்ல திட்டங்கள் வரவேற்கத்தக்கது. மேலும், கொடைக்கானல் நகரம் வளா்ச்சியை நோக்கி செல்வதற்கான தொடக்கமாக உள்ளது இந்தத் திட்டத்தை சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைவரும் வரவேற்பாா்கள் என்றனா்.

அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கடைகளை அடைத்துள்ள வியாபாரிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments