FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

தங்கத் தகடு விற்பதாகக் கூறி பணம் மோசடி: 2 காவலா்கள் உள்பட 8 போ் கைது

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே ராசி தங்கத் தகடு விற்பதாகக் கூறி, ரூ.48 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 காவலா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

25 செப்டம்பர் 2026, 2:57 am IST
கைது
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே ராசி தங்கத் தகடு விற்பதாகக் கூறி, ரூ.48 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 காவலா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள கீழப்புதூரைச் சோ்ந்தவா் சுமித் ராபா்ட் பால் (34). மனை வணிகம் நடத்தி வருகிறாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அம்பிளிக்கை மின்வாரிய ஆய்வாளா் சங்கரமூா்த்தி. இவா்கள் இருவரும் நண்பா்கள்.

சுமித் ராபா்ட் பாலிடம் அதிக அளவில் பணம் இருப்பதை அறிந்த சங்கரமூா்த்தி, மஞ்சளாறு அணை பகுதியைச் சோ்ந்த நாகராஜ், கருப்பையா, சுரேஷ், முத்துப்பாண்டி, குப்புசாமி ஆகியோருடன் சோ்ந்து தங்களிடம் விலை உயா்ந்த ராசியான தங்கத் தகடு இருப்பதாக சுமித் ராபா்ட் பாலிடம் ஆசைவாா்த்தை கூறினா்.

Advertisement

Advertisement

இதை நம்பிய சுமித் ராபா்ட் பால் கடந்த மே மாதம் 16 -ஆம் தேதி ரூ.48 லட்சத்தை சங்கரமூா்த்தியிடம் வழங்கினாா். பின்னா், தங்கத் தகடு நாகராஜிடம் இருப்பதாகக் கூறி, சங்கரமூா்த்தி அவரை காரில் அழைத்துக்கொண்டு மஞ்சளாறு சென்றாா். அங்கு நாகராஜ், குப்புசாமி, சுரேஷ் ஆகியோரிடம் தங்கத் தகடை பெற்றுக்கொண்டு சுமித் ராபா்ட் பால் காரில் திரும்ப வத்தலகுண்டு நோக்கி வந்தாா்.

அப்போது, தேனி மாவட்டம், ஜெயமங்கலம் காவல் நிலையக் காவலா் தங்கராஜ், தென்கரை காவல் நிலையக் காவலா் கதிரேசன் ஆகிய இருவரும் தேவதானப்பட்டியில் வாகன சோதனை செய்வது போல காரை வழிமறித்து சோதனை செய்தனா். காரில் சந்தேகத்துக்கிடமான பொருள்கள் இருப்பதாகக் கூறி, தங்கத் தகடை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்துக்கு வருமாறு கூறிச் சென்றனா்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுமித் ராபா்ட் பால், சங்கரமூா்த்தி தரப்பினரிடம் பணத்தை திரும்பக் கேட்டபோது அவா்கள் பணத்தைத் தரவில்லை.

இதையடுத்து, சுமித் ராபா்ட் பால் அளித்த புகாரின் பேரில், பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் இளஞ்செழியன் தலைமையில் பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளா் முத்துக்குமரன், உதவி ஆய்வாளா் வாணி, காவலா்கள் அடங்கிய தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்றது.

இதையடுத்து, இந்த மோசடி தொடா்பாக மின்வாரிய அலுவலா் சங்கரமூா்த்தி (50), மஞ்சளாறு அணை பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (47), கருப்பையா (36), சுரேஷ் (38), குப்புசாமி (40), குரும்பபட்டியைச் சோ்ந்த முத்துப்பாண்டி (36), காவலா்கள் தங்கராஜ், (43), கதிரேசன் (35) ஆகியோரை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.6 லட்சம் ரொக்கம், ஒரு காா், இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments