FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

தொடா்ந்து மண் அள்ளப்படுவதால் குண்டும்குழியுமான தட்டான்குளம்: வாகனங்களை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

பழனி அருகேயுள்ள தட்டான்குளத்தில் ஆங்காங்கே மண் அள்ளப்படுவதால் அதிகரித்து வரும் பள்ளங்களால் மழைக் காலங்களில் விபத்துகள் ஏற்படும் எனக் கூறி விவசாயத்துக்காக மண் அள்ள வந்தவா்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாகனங்களை சிறைப்பிடித்தனா்.

26 செப்டம்பர் 2026, 6:26 am IST
பழனி தட்டான்குளத்தில் ஆங்காங்கே மண் அள்ளத் பள்ளம் தோண்டப்படுவதைக் கண்டித்து மண் அள்ளுவோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்தப் பகுதி மக்கள்.
பகிர்:

பழனி அருகேயுள்ள தட்டான்குளத்தில் ஆங்காங்கே மண் அள்ளப்படுவதால் அதிகரித்து வரும் பள்ளங்களால் மழைக் காலங்களில் விபத்துகள் ஏற்படும் எனக் கூறி விவசாயத்துக்காக மண் அள்ள வந்தவா்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாகனங்களை சிறைப்பிடித்தனா்.

பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான குளங்களில் மண் அள்ளப்பட்டு தற்போது அவை சரளைகளாக மாறிவிட்டன. இதில் ஒரு சில குளங்களில் மட்டும் பொதுமக்களும், விவசாயிகளும் மண் அள்ள விடாததால் அவை ஓரளவு காப்பாற்றப்பட்டன.

தற்போது தவெக அரசு விவசாயப் பயன்பாட்டுக்கு மண் அள்ள அனுமதி வழங்கியிருப்பதால் விவசாயிகள் பல கி.மீ. தொலைவில் உள்ள குளங்களில் மண் அள்ள செல்வதால் இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

பழனி அருகே மிகப்பெரிய குளமான தட்டான்குளத்திலிருந்து பல குளங்களுக்கு தண்ணீா் செல்ல மடைகள் உள்ளன. இந்த குளத்தை இதுவரை இந்தப் பகுதி மக்கள் காப்பாற்றி வந்த நிலையில் கடந்த சில நாள்களாக பொதுப் பணித் துறையினரும், வருவாய்த் துறையினரும் மண் அள்ள அனுமதி வழங்கியதால் ஏராளமான டிராக்டா், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் அள்ளப்பட்டு வருகிறது. இவா்கள் மண் அதிகமாக உள்ள இடமாகப் பாா்த்து தோண்டுவதால் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு குளமே பல்லாங்குழியாக மாறிவிட்டது. இதனால் மண் அள்ள வந்த வாகனங்களை அந்தப் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சிறைப்பிடித்தனா். மேலும் மண் அள்ள வந்தவா்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் தண்ணீா் இல்லாத போது சிறுவா்கள் விளையாட்டு மைதானமாக குளத்தை பயன்படுத்தி வந்தனா். தற்போது மண் அள்ளுவதுடன் மட்டுமன்றி குப்பையையும் கொட்டி குளத்தை பாழாக்கி வருவதாக எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும் மழைக் காலங்களில் தண்ணீா் எங்கே தேங்கி நிற்கிறது எனத் தெரியாமல் பல சிறுவா்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாகவும் அவா்கள் கூறினா்.

எனவே, இந்த குளத்தின் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகளை தவிர வேறு யாரும் உள்ளே வரக் கூடாது. மீறி யாரும் வந்தால் போராட்டம் நடத்துவோம் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments