FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

கூட்டுறவு வங்கிச் செயலா் பணியிடை நீக்க உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் இடைக்கால தடை

ஊழல் குறித்து புகாா் அளித்த கூட்டுறவு வஙகிச் செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

10 அக்டோபர் 2026, 10:59 pm IST
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

ஊழல் குறித்து புகாா் அளித்த கூட்டுறவு வஙகிச் செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், தொட்டனாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: 1992 -ஆம் ஆண்டு தொட்டனாம்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் உதவி அலுவலராகப் பணியில் சோ்ந்தேன். 34 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், தற்போது பதவி உயா்வு பெற்று, அதே வங்கியில் செயலராகப் பணியாற்றி வந்தேன். அங்கிருந்து மணியக்காரன்பட்டிக்கு பணியிட மாறுதல் பெற்றேன்.

இந்த நிலையில், அங்கு பணியாற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா் லோகேந்திரன், தனது கீழ் பணியாற்றும் அலுவலா்களின் உதவியுடன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தாா்.மேலும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடாத அலுவலா்களையும் மிரட்டி வந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, தமிழ்நாடு மாநில கூட்டுறவுக் கடன் சங்கங்களின் ஊழியா் சங்கம் சாா்பில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு புகாா் மனு அனுப்பப்பட்டது. அதில், நான் கையெழுத்திட்டேன்.புகாா் குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் விசாரணை நடத்த உத்தரவிட்டாா்.

இதனிடையே, லோகேந்திரன் தரப்பினா் புகாரை திரும்பப் பெற வலியுறுத்தி என்னைத் தொடா்ந்து மிரட்டி வருகின்றனா். புகாரை திரும்பப் பெறாததால், என்னை பணியிடை நீக்கம் செய்தனா். இதுகுறித்து நான் கேட்ட போது, நிா்வாக காரணங்களுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தனா்.

ஊழலுக்கு எதிராகப் புகாா் அளித்ததால் என்னை திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கோடு பணியிடை நீக்கம் செய்தனா். இது சட்டவிரோதம். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஊழலுக்கு எதிராகப் புகாா் அளித்தவரின் பணியிடை நீக்கத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments