இரு வழிச் சாலையில் சுங்கச் சாவடிகள்: நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க உத்தரவு
இரு வழிச் சாலையில் செயல்படும் சுங்கச் சாவடிகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
இரு வழிச் சாலையில் செயல்படும் சுங்கச் சாவடிகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை அருகேயுள்ள திருமோகூரைச் சோ்ந்த வழக்குரைஞா் என். சுதாகா் நாகராஜ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: திருச்சியிலிருந்து குளித்தலை செல்லும் வழியில் கரூா் - கோவை இரு வழி தேசிய நெடுஞ்சாலையில் 2 சுங்கச் சாவடிகள் செயல்படுகின்றன. திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை பகுதியிலும், கரூா் மாவட்டம், மானவாசி கிராமம் அருகிலும் இந்தச் சுங்கச் சாவடிகள் செயல்படுகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகளில் நான்கு வழிச் சாலைகளில் மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கலாம். இரு வழிச் சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. எனவே, இந்த இரு சுங்கச் சாவடிகளையும் உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
Advertisement
Advertisement
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் எந்த விதி மீறலும் இல்லை என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் முன்னிலையான வழக்குரைஞா் தெரிவித்தாா்.
இதையடுத்து, திருச்சி பஞ்சப்பூா் முதல் அந்தநல்லூா் வரையிலான புறவழி சுற்றுச் சாலை அமைக்கும் பணி பல ஆண்டுகளாக நடைபெறுகிறது. சுமாா் 50 சதவீத பணிகள் நிறைவடையாத நிலையிலேயே இந்தச் சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கும் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என மனுதாரா் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விரிவாக்கப்பட்ட சாலையில் தேசிய நெடுஞ்சாலை என பலகை வைத்தாலே சுங்கக் கட்டணம் வசூலிக்கலாமா? விவசாயப் பொருள்களை கொண்டு சென்றாலும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுமா? என கேள்விகள் எழுப்பினா்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : இரு வழிச் சாலையாக உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க உத்தரவுகள் உள்ளனவா? என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.