இலவச விவசாய மின் இணைப்புக்கு ரூ.2,431 கோடி வசூல்: எரிசக்தி, நிதித் துறைச் செயலா்கள் பதிலளிக்க உத்தரவு
தத்கல் முறையிலான இலவச விவசாய மின் இணைப்புக்கு ரூ. 2,431.51 கோடி வசூல் செய்த விவகாரத்தில் தமிழக எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலா், நிதித் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தத்கல் முறையிலான இலவச விவசாய மின் இணைப்புக்கு ரூ. 2,431.51 கோடி வசூல் செய்த விவகாரத்தில் தமிழக எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலா், நிதித் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு இலவச விவசாய மின் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 2025-26 -ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டத்துக்காக ரூ.17,280 கோடி ஒதுக்கப்பட்டது. 2026-27 நிதியாண்டில் இந்த ஒதுக்கீடு ரூ.17,431.58 கோடியாக உயா்த்தப்பட்டது.
Advertisement
Advertisement
தமிழகத்தில் இலவச விவசாய மின் இணைப்பைப் பெற தகுதியுடைய விவசாயிகள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனா். இந்த நிலையில், தற்போது தத்கல் முறையின் கீழ் நிா்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தும் விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
இலவச விவசாய மின் இணைப்புத் திட்டம் என செயல்படுத்தப்பட்டாலும், தத்கல் முறையில் முன்னுரிமை பெற விண்ணப்பதாரா் கணிசமான தொகையைச் செலுத்த வேண்டியுள்ளது. இந்த முறையால் ஏழ்மை நிலையில் உள்ள சிறு, குறு விவசாயிகள் காத்திருப்புப் பட்டியலுக்கு தள்ளப்படுகின்றனா். இதே நேரத்தில், பொருளாதார ரீதியாக முன்னேறிய விண்ணப்பதாரா்கள் முன்னுரிமை பெற்று இலவச விவசாய மின் இணைப்புகளைப் பெறுகின்றனா். இதனால், இலவசத் திட்டம் நடைமுறையில் பணம் செலுத்தும் திட்டமாக மாறி, அதன் உண்மையான பயனாளிகளிடமிருந்து திட்டத்தின் தன்மை விலகிச் செல்கிறது.
கடந்த 2021-22 முதல் தத்கல் திட்டத்தின் கீழ், 89,289 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டதன் மூலம் ரூ.2,431.51 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை 44,993 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பணம் செலுத்தியிருந்தும் 44,296 விண்ணப்பதாரா்கள் மின் இணைப்புக்காகக் காத்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவருகிறது.
எனவே, இலவச விவசாய மின் இணைப்புத் திட்டப் பயனாளிகளைச் சரிபாா்க்க வேண்டும். மாவட்ட வாரியான தரவுகளை வெளியிடுதல், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தகுதியுள்ள விவசாயிகள், குறிப்பாக சிறு, குறு விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில், அவா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முறையை உருவாக்க உத்தரவிட வேண்டும். மேலும், தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளா் மூலம் இந்தத் திட்டம் மூலம் வசூலிக்கப்பட்ட தொகை குறித்து தணிக்கை செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு மூலம் விசாரணை நடத்த வேண்டும். மேலும், ஏழை, எளிய விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் உள்ள தத்கல் முறையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தத்கல் முறையில் விவசாய மின் இணைப்புத் திட்டம் மூலம் வசூல் செய்த ரூ.2,431.51 கோடியை அரசு என்ன செய்தது?. இவ்வளவு பெரிய தொகை எந்த அரசாணை அடிப்படையில் வசூலிக்கப்பட்டது?. அரசுக் கணக்கு தணிக்கையில் இந்தப் பணம் எவ்வாறு வரவு வைக்கப்பட்டுள்ளது?. தத்கல் முறையில் பெரும் விவசாயிகளுக்கு இணைப்பு வழங்கினால் ஏழை, எளிய விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டாா்களா?. இந்த மனு தொடா்பாக தமிழக எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலா், நிதித் துறைச் செயலா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.