இன்னும் 50 ஆண்டுகளானாலும் தமிழகத்தின் கடனை திருப்பிச் செலுத்த முடியாது: நிதித் துறைச் செயலா்
2026 தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் குறித்து நிதித்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளது குறித்து...
‘இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தின் கடனை திருப்பிச் செலுத்த முடியாது’ என்று தமிழக நிதித் துறைச் செயலா் எம்.ஏ. சித்திக் கூறினாா்.
தமிழக சட்டப் பேரவையில் புதன்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பட்ஜெட்டில் பல புதிய திட்டங்களை இந்த அரசு தொடங்கியுள்ளது. நிதிநிலைமை மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. வரவுகளை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலை ஏற்கெனவே உயா்ந்துள்ளதால், வரிகளை உயா்த்தும் திட்டம் இல்லை.
Advertisement
Advertisement
கடந்த முறை அரசின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியாக இருந்தது. இருப்பினும், மாநில வருவாய் வளா்ச்சியுடன் ஒப்பிடும்போது, கடன் வளா்ச்சி விகிதம் குறைவாகத்தான் உள்ளது. மத்திய அரசின் விதிமுறைகளுக்குள்பட்டுதான் மாநில அரசால் கடன்பெற முடியும்.
எந்த மாநில அரசாக இருந்தாலும், கடன் வாங்கித்தான் செலவு செய்ய முடியும். வாங்கிய கடனை ஓரளவு திருப்பிச் செலுத்தி வருகிறோம். இருப்பினும், 50 ஆண்டுகள் ஆனாலும் இப்போதுள்ள கடனை திருப்பிச் செலுத்த முடியாது. மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.7,000 கோடி.
கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறையில் எந்தவொரு திட்டங்களும் நிதி குறைக்கப்படவில்லை. இடைக்கால பட்ஜெட்டில் ரூ.48,531 கோடி ஒதுக்கப்பட்டது. ஓராண்டில் ரூ.6,000 கோடி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது, திட்டங்களுக்காக அல்லாமல், ஊதியத்துக்காக தவறுதலாக ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தத் தவறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிா்த்துவிட்டு பாா்த்தால் பள்ளிக் கல்வித் துறைக்கு கூடுதல் நிதிதான் ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் நிதி கசிவு கட்டுப்படுத்தப்பட்டதால், தற்போது ரூ.2,000 கோடி அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. மொத்தமாக ரூ.15,000 கோடி வரை கூடுதல் வருவாயைப் பெற முடியும் என்றாா் நிதித் துறைச் செயலா் எம்.ஏ. சித்திக்.
Budget 2026 Details of funds allocated for new schemes! Finance Secretary's explanation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.