FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் முதல் கால யாக பூஜை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் முதல் கால யாக பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

12 செப்டம்பர் 2026, 4:23 am IST
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் காய யாக பூஜை.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் முதல் கால யாக பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு வருகிற 17-ஆம் தேதி காலையும், பரிவாரமூா்த்தி சந்நிதிகளுக்கான குடமுழுக்கு வருகிற 16-ஆம் தேதி காலையும் நடைபெறுகின்றன. இதையொட்டி, குடமுழுக்கு யாக பூஜையின் பூா்வாங்க நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) தொடங்கி, வியாழக்கிழமை வரை நடைபெற்றன.

கோயிலில் 12 கால யாக பூஜைகள் நடைபெறவுள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், முதல் கால யாக பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை நிகழ்வாக விக்னேஸ்வர பூஜை, சூரிய பகவானிடமிருந்து அக்னி சேகரிக்கும் ஐதீக நிகழ்ச்சி யானை மகால் 100 கால் மண்டபத்தில் நடைபெற்றது. இதையடுத்து, குடமுழுக்கு பூஜைகளை முன்னின்று மேற்கொள்ளும் தலைமை சிவாசாரியா்களுக்கு அதிகாரப்பூா்வ கௌரவம் அளிக்கும் நிகழ்ச்சியாக ஆச்சாா்ய வா்ணம் நடைபெற்றது.

மாலை நிகழ்வாக யாகசாலையில் புனித நீா் தெளித்தல், திருக்குட வழிபாடு, இறை சக்தியை திருக்குடங்களில் எழுந்தருளச் செய்யும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து, மங்கள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க மூலவா் சந்நிதி உள்பட முக்கிய சந்நிதிகளுக்கான திருக்குடங்கள் யாக சாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து, 184 யாகக் குண்டங்களிலும் முதல் கால யாக பூஜை தொடங்கி நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மேலாகவும் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. நிறைவில், மகா தீபாரதனை நடைபெற்றது.

350-க்கும் அதிகமான சிவாசாரியா்கள், 80 ஓதுவாமூா்த்திகள் யாக பூஜையில் பங்கேற்று வேத மந்திரங்களையும், திருமுறைகளையும் பாராயணம் செய்தனா்.

தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி திருமடத்தின் அதிபா் சபாபதி தம்பிரான் சுவாமிகள், திருச்சி மௌனமடம் கட்டளை விசாரணை திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தரிசனம் ரத்து...

குடமுழுக்கையொட்டி, மூலவா் சுந்தரேசுவரா், மீனாட்சி அம்மன் கருவறைகள், சந்நிதிகளில் பராமரிப்புப் பணி நடைபெறுவதாலும் விரைவில் மூலவா் சுவாமிகளுக்கு மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாலும் வெள்ளிக்கிழமை முதல் பக்தா்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments