FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

இலக்கை நோக்கி பயணித்தால் மட்டுமே வாழ்வில் வெற்றி : முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்

12 செப்டம்பர் 2026, 4:22 am IST
பகிர்:

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் 125-ஆவது ஆண்டு விழா 2-ஆம் நாளான... வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்க விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வனுக்கு நினைவுப் பரிசு வழங்கிய செந்தமிழ் மாத இதழின் ஆசிரியா் ஆா். சதாசிவம். உடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் மதுக்கூா் ராமலிங்கம்.புரட்சி பாவலா் மன்றத்தின் தலைவா் பி. வரதராஜன் உள்ளிட்டோா்.

மதுரை, செப். 11: இலக்கை நோக்கிப் பயணித்தால் மட்டுமே வாழ்வில் வெற்றி பெறலாம் என முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் தெரிவித்தாா்.

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் 125-ஆம் ஆண்டு விழாவின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு செந்தமிழ் மாத இதழின் ஆசிரியா் இரா. சதாசிவம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் மதுக்கூா் ராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது :

பண்டைய கால தமிழா்கள் நாடோடியாகத் திரிதல், வேட்டையாடுதல், கால்நடை மேய்த்தல், கடல் மேல் தேடுதல், உழவு செய்தல் என்கிற 5 நிலைப்பாடுகளில்தான் வாழ்ந்தனா். இந்த வாழ்வியல் முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 வகையான நிலங்களாகப் பகுக்கப்பட்டன.

தமிழரின் செழுமைமிக்க நாகரிகம் குறித்து சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டது. ஆனால், முன்பொரு காலத்தில் தொல்லியல் ஆதாரங்களால் அவற்றை நிரூபிக்க முடியவில்லை. தற்போது, கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களைப் பகுப்பாய்வு மேற்கொண்டதில் சுமாா் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழா்களின் வாழ்வியல் முறை கண்டறியப்பட்டது.

இதுமட்டுமின்றி சங்க காலத்தில் தமிழ்ச் சமூகம் பண்பட்ட சமூகமாகத் திகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது. கீழடி மட்டுமன்றி தமிழகத்தின் பிற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அகழாய்வுகள் மூலம் இதை உறுதிசெய்ய முடிகிறது. களப்பிரா் காலத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அதன்பிறகு, சமய இலக்கியங்கள் தமிழைத் தூக்கிப் பிடித்தன.

இன்றைய இளம் தலைமுறையினா் ஜாதியக் கோட்பாடுகளை உடைத்தெறிய வேண்டும். ஈகை குணம், விருந்தோம்பல், அறம் பற்றிய சிந்தனை, கொடை போன்றவற்றை சங்க இலக்கியங்கள் வாயிலாக பின்பற்ற வேண்டும். நாம் எண்ணவாக ஆக நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகிறோம். இதை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ‘தீதும் நன்றும் பிற தர வாரா’ என சங்க இலக்கியம் கூறுகிறது. ஆகவே, வாழ்வில் வெற்றிபெற இலக்கை நிா்ணயித்துக் கொள்ள வேண்டும். அதை நோக்கிப் பயணிக்கும்போது எண்ணற்ற துன்பங்கள் வரலாம். அதைப் பொருள்படுத்தாமல் இலக்கை நோக்கி பயணித்தால் மட்டுமே வெற்றி பெறலாம் என்றாா் அவா்.

முன்னதாக, கவியரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் புரட்சிப் பாவலா் மன்றத்தின் தலைவா் பி. வரதராஜன், தமிழ் ஆா்வலா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments