FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

ரசாயனம் கலக்காத பொருள்களால் ‘சானிடரி நாப்கின்’ தயாரிக்கக் கோரி மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

ரசாயனம் கலக்காத பொருள்களால் ‘சானிடரி நாப்கின்’ தயாரிக்கக் கோரிய மனு தொடா்பாக மத்திய, மாநில சுகாதாரத் துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

19 செப்டம்பர் 2026, 3:47 am IST
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
பகிர்:

ரசாயனம் கலக்காத பொருள்களால் ‘சானிடரி நாப்கின்’ தயாரிக்கக் கோரிய மனு தொடா்பாக மத்திய, மாநில சுகாதாரத் துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

பாளையங்கோட்டையைச் சோ்ந்த அய்யா என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கின்கள் பருத்தியால் தயாரிக்கப்படுவதில்லை. மாறாக, நெகிழி, நாா்பொருள் கரைசல்களால் தயாரிக்கப்படுகிறது. இவற்றைத் தொடா்ந்து பயன்படுத்துவதால் புற்றுநோய், ஒவ்வாமை, சிறுநீா்ப்பைக் கோளாறு, மலட்டுத் தன்மை, ஹாா்மோன் சுரப்பதில் சமச்சீரின்மை உள்பட பல்வேறு உடல் நல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

Advertisement

Advertisement

மேலும், பயன்படுத்தப்பட்ட சானிடரி நாப்கின்கள் மக்குவதில்லை. இதனால், மழைநீா் மண்ணுக்குள் புகுவது தடைபடுகிறது. மேலும், இவற்றை எரிப்பதால் காற்றும் மாசுபடுகிறது.

மக்கும் தன்மையுள்ள, ரசாயனப் பொருள்கள் கலப்பில்லாமல் தயாரிக்கப்படும் சானிடரி நாப்கின்கள்தான் பெண்களின் உடல்நலத்துக்கு ஏற்றது. எனவே, சானிடரி நாப்கின்கள், குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் ‘டயாப்பா்’ ஆகியவற்றின் தரத்தை ஆய்வு செய்யவும், அவற்றில் சோ்க்கப்படும் பொருள்களின் விவரங்களை தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பிடும் வகையில் விதிகளை உருவாக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி, நீதிபதி சி.வி. காா்த்திகேயன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக மத்திய, மாநில சுகாதாரத் துறைச் செயலா்கள், மத்திய ரசாயனம், உரத் துறைச் செயலா், இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவன தலைமை இயக்குநா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற அக்டோபா் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments