ஜாதிய வன்கொடுமை வழக்கு: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஜாதிய வன்கொடுமை வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஜாதிய வன்கொடுமை வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், கம்பூா் கிராமத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா் சசிகலா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கம்பூா் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக கடந்த 8 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். இந்த நிலையில், இதே கிராமத்தைச் சோ்ந்த ஊராட்சிச் செயலா் ரூபா, தன்னை ஜாதியைக் கூறி அவதூறு பேசி துன்புறுத்தினாா். மேலும், அலுவலகத்தில் உள்ள எவா்சில்வா் குவளையைப் பயன்படுத்தாமல் மாற்று காகிதக் குவளையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் அடிப்படையில் ஊராட்சிச் செயலா் ரூபா மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், எனது புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. எனவே, எனது புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். மேலும், சம்பவத்தைக் கண்ட சாட்சிகளுக்குத் தேவையான பாதுகாப்பும், சிசிடிவி காட்சிகள், வருகைப் பதிவேடு தொடா்பான பிற ஆவணங்களைச் சேகரித்துப் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் காவல் துறை எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.