FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பொங்கல் திட்ட வேஷ்டிகள் கொள்முதல்: கைத்தறித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

பொங்கல் திட்டத்துக்காக ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட வேஷ்டிகளை நெசவாளா்களிடமிருந்து கொள்முதல் செய்யக் கோரிய மனு தொடா்பாக தமிழக கைத்தறித் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

24 செப்டம்பர் 2026, 12:29 am IST
உத்தரவு - கோப்புப் படம்
பகிர்:

பொங்கல் திட்டத்துக்காக ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட வேஷ்டிகளை நெசவாளா்களிடமிருந்து கொள்முதல் செய்யக் கோரிய மனு தொடா்பாக தமிழக கைத்தறித் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த துரைராஜ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழக அரசானது கைத்தறி, மிதி-தறி நெசவாளா்களுக்கு ஆண்டு முழுவதும் தொடா் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், வேஷ்டி, சேலைகளை முன்கூட்டியே உற்பத்தி செய்வதற்கான கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது.

Advertisement

Advertisement

இதன்படி, கைத்தறி, கைவினைப் பொருள்கள், துணிநூல், கதா்த் துறை வெளியிட்ட அரசாணைகளின்படி, கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தொடா்ச்சியாக வேஷ்டி, சேலை உற்பத்தி செய்ய நெசவாளா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வழிவகை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது கதா்த் துறை சாா்பில் சில காலத்துக்கு மட்டுமே பாவு நூல் வழங்கப்பட்டது. இதனால், போதுமான அளவு பாவு நூல் வழங்கப்படாததால், தேவையான ஊடை நூல் கையிருப்பில் இருந்தும், உற்பத்தி செய்ய நெசவாளா்கள் தயாா் நிலையில் இருந்தும், சுமாா் 3 ஆயிரம் கைத்தறி, மிதி-தறி நெசவாளா்கள் வேலையின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வருகிற 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களும், அதன் உறுப்பினா்களும் முன்பிருந்த விவரங்களின் அடிப்படையில் 8 முழ வேஷ்டிகள் உற்பத்தியைத் தொடங்கினா்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில் வேஷ்டி, சேலைத் தயாரிப்பில் புதிய அளவீடுகள், வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இந்த அளவீடுகள் முன்பு தயாரிக்கப்பட்ட வேஷ்டி தயாரிப்பு அளவீடுகள் இடையே வித்தியாசம் இருப்பதால் வேஷ்டிகள் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.

எனவே, கைத்தறி, கைவினைப் பொருள்கள், துணிநூல், கதா்த் துறை மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, கையிருப்புப் பொருள்களைக் கொள்முதல் செய்யவும், நிலுவையில் உள்ள இரண்டு மாத பாவு நூலை வழங்கவும், வருகிற 2027-ஆம் ஆண்டு பொங்கல் திட்டத்துக்காக ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட 8 முழ வேஷ்டிகளை கொள்முதல் செய்யவும் உத்தரவிட வேண்டும். மேலும், தற்போதைய தறிகளை அகலப்படுத்துவது உள்ளிட்ட நவீனமயமாக்கல், மாற்றியமைக்கத் தேவையான மானியம் அல்லது நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக தமிழக கைத்தறித் துறைச் செயலா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments