திருவாடானை பகுதியில் உவர் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
திருவாடானை பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, உவர் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
திருவாடானை பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, உவர் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னர்கள் காலத்தில் ஏராளமான ஏரி, குளங்கள் இருந்தன. காலப் போக்கில் அரசு நிர்வாகத்தினர் அவற்றை சரியாக பராமரிக்காததால், பல ஊரணிகள் காணாமல் போய்விட்டன. பல இடங்களில் நீர் நிலைகளின் பாதிக்கும் மேற்பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆண்டுதோறும் வறட்சி அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக தொடர் வறட்சி காரணமாக அனைத்து நீர்நிலைகளும் வறண்டு போய்விட்டன. இதனால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திருவாடானை பகுதியில் பெரும்பான்மையான கிராமங்களில், எங்கு கிணறு தோண்டினாலும் உவர் நீர் தான் கிடைக்கும். இதனால் வெளியூர்களில் இருந்து லாரியில் வரும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி, இப்பகுதியினர் சமாளித்து வருகின்றனர். அரசு பல இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்தும், உப்புத் தண்ணீரே வருவதால் அவை குடிநீருக்கு பயன்படுத்த முடியவில்லை. எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்க, உவர் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
திருவாடானை பகுதியில் 1500 அடிக்கு ஆழ்துளை கிணறு அமைத்தால் மட்டுமே நல்ல தண்ணீர் கிடைக்கிறது. ஆனால், அரசு சார்பில் 500 முதல் 800 அடி வரை மட்டுமே ஆழ்துளை கிணறு அமைக்கப்படுகிறது. இதனால், குடிநீர் கிடைக்காததோடு, அரசு நிதியும் வீணடிக்கப்படுகிறது. எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் 1500 அடிக்கு ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். இல்லையெனில், உவர்நீரை சுத்திகரித்து, சுகாதாரமான குடிநீராக மாற்றி, பொதுமக்களுக்கு விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.