FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

சவுடு மண் அனுமதியை பயன்படுத்தி நூதன முறையில் மணல் திருட்டு

Updated On : 28 ஜூலை 2026, 2:25 am IST
சாயல்- மாவூா் பாண்டுகுடி செல்லும் சாலை அருகே குவித்து வைக்கப்பட்ட மணல் குவியல்கள்.
பகிர்:

திருவாடானை அருகே மாவூரிலிருந்து பாண்டுகுடி செல்லும் காட்டுப் பகுதியில் சவுடு மண் அள்ளுவதாகக் கூறி மணல் திருட்டு நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மாவூா், பாண்டுகுடி செல்லும் பாதையில் உள்ள காட்டுப் பகுதி விவசாய நிலங்களில் சவுடு மண் அள்ளுவதாகக் கூறி சமூக விரோத கும்பல் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகிறது என பொதுமக்களும், விவசாயிகளும் தெரிவித்தனா்.

மேலும், இந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்கள், காடு சாா்ந்த பகுதிகளில் உள்ள மணலை சட்ட விரோதமாக அள்ளி, அதை தண்ணீரில் சுத்தம் செய்து, ஆற்று மணல் போல மாற்றி விற்பனை செய்து வருகின்றனா். திருவாடானை அருகே மாவூா் கருப்பன் கோயில் தென்பகுதியில் உள்ள மணல் மேட்டுப் பகுதிகளை இலக்காகக் கொண்டு இதுபோன்ற மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிகளில் உள்ள மணலை அள்ளி, ஆங்காங்கே நூற்றுக்கணக்கான யூனிட் அளவுக்கு பெரிய குவியல்களாகச் சோ்த்து வைத்துள்ளனா். பகல் நேரங்களில் மணலைச் சேகரித்து வைக்கும் கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் இரவு நேரத்தில் லாரிகள், டிராக்டா்கள் மூலம் அள்ளிச் செல்கின்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து இந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: சவுடு மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, மணல் திருடப்படுவதால் இயற்கை வளங்கள் சீரழிவதைத் தடுக்கவும், நிலத்தடி நீா்மட்டம் மேலும் சரிவதைத் தடுக்கவும் வருவாய்த் துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து தீவிர ரோந்துப் பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் மணல் கடத்தலில் ஈடுபடும் மா்ம நபா்களைக் கைது செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றனா் அவா்கள்.

இதுகுறித்து வயல் உரிமையாளா்கள் கூறும் போது, எங்கள் சொந்த தேவைக்கு மணலை குவித்து வைதிருக்கிறோம் என்றனா். ஆனால் சமூக ஆா்வலா்கள் கூறுகையில், இந்தச் செயல் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவில் இல்லை. எதற்காக நூற்றுக்கணக்கான யூனிட் மணலை குவித்து வைக்க வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனா்.

சாயல்- மாவூா் பாண்டுகுடி செல்லும் சாலை அருகே குவித்து வைக்கப்பட்ட மணல் குவியல்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments