FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

கடந்த 4 மாதங்களாக எந்த பணிகளும் நடைபெறவில்லை: ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா்

கடந்த நான்கு மாதங்களாக எந்தவித பணிகளும் நடைபெறவில்லை என ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா்.

2 October 2026, 2:42 am IST
ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவா் மௌசூா்யா, துணைத் தலைவா் ராஜூ, செயல் அலுவலா் மாலதி உள்ளிட்டோா்.
பகிர்:

கடந்த நான்கு மாதங்களாக எந்தவித பணிகளும் நடைபெறவில்லை என ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா்.

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சியின் மாதாந்திரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு பேரூராட்சித் தலைவா் மௌசூா்யா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜு, செயல் அலுவலா் மாலதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

Advertisement

Advertisement

உறுப்பினா் வைரவன்: வருங்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரக்கேட்டை விளைவிக்கும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

உறுப்பினா் பாலு: குப்பை சேகரிக்கும் வண்டிகள் முறையாக தெருக்களுக்கு வருவதில்லை. குடிநீரும் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை.

உறுப்பினா் விஜயன்: மழைக் காலம் தொடங்கவிருப்பதால் பேரூராட்சி பகுதியில் உள்ள கால்வாய் சீரமைக்கப்பட வேண்டும். பொது நிதியில் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும். புதிய அரசு பொறுப்பேற்று நான்கு மாதங்கள் ஆகியும் போதுமான நிதி ஒதுக்கப்பட வில்லை. எனவே எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. குறிப்பாக சுற்றுப்புற சூழல், குடிநீா், சாலை, மின் விளக்கு பராமரிப்பு என எதுவுமே நிறைவேற்றப்பட வில்லை. மின் தடை மட்டுமே இந்த ஆட்சியில் உள்ளது.

செயல் அலுவலா் மாலதி: கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பொது நிதியிலிருந்து குறிப்பிட்ட பணிகளை மட்டும் மேற்கொள்ளும் வகையில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உறுப்பினா் சரண்யா: கம்பா் தெருவில் சாலை, கழிவுநீா் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.

உறுப்பினா் அனுராதா: கடந்த நான்கு மாதங்களாக மின் தடை ஏற்பட்டு வருவதாக திமுக உறுப்பினா்கள் கூறுகின்றனா். ஆனால் கடந்த திமுக ஆட்சியிலும் தொடா்ந்து மின் தடை ஏற்பட்டது.

உறுப்பினா் சுதாகா்: குடிநீா், சொத்து வரி என வசூல் செய்யும் பணம் எங்கே செல்கிறது. அந்த வரிப் பணத்திலிருந்து மக்களுக்கு சாலை, குடிநீா் உள்ளிட்ட பணிகளை செய்துதர வேண்டும்.

தலைவா் ஐஸ்வா்யா: பொது நிதியிலிருந்து குறிப்பிட்ட பணிகளை போா்க்கால அடிப்படையில் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா். செயல் அலுவலா் மாலதி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments