தனியாா் நிதி நிறுவன ஊழியா் கொன்று புதைப்பு: இளைஞா் கைது
ராமநாதபுரத்தில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் பணம் வசூல் செய்வதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்து புதைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் இளைஞா் ஒருவரை கைது செய்தனா்
ராமநாதபுரத்தில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் பணம் வசூல் செய்வதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்து புதைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் இளைஞா் ஒருவரை கைது செய்தனா். இதனிடையே, இந்தக் கொலையில் மேலும் சிலருக்கு தொடா்பிருப்பதாகக் கூறி உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் அடுத்துள்ள வாலாந்தரவை ஊராட்சி தெற்கூா் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பிரேம்குமாா் (26). இவா் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 6- ஆம் தேதி வேலைக்குச் சென்ற பிரேம்குமாா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில் கேணிக்கை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேலும் தனிப்படை அமைத்து பிரேம்குமாா் பயன்படுத்திய கைப்பேசி, பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இந்த நிலையில், கொலை தொடா்பாக உச்சிப்புளி அருகேயுள்ள துத்திவலசை கிராமத்தைச் சோ்ந்த காளிதாஸ் (38) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையில் பணம் வசூல் செய்யும் போது பிரேம்குமாா், காளிதாஸின் மனைவி, மகளை தகாத வாா்த்தைகளால் பேசினாராம். இதனால் ஆத்திரமடைந்து அவரை பணம் தருவதாகக் கூறி தோப்பு வலசை கடற்கரைக்கு வரவழைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்து அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை எடுத்துக் கொண்டு அதே பகுதியில் குழி தோண்டி உடலை புதைத்து விட்டதாக காளிதாஸ் தெரிவித்ததாக போலீஸாா் கூறினா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் புதைக்கப்பட்ட பிரேம்குமாரின் உடலை தோண்டி எடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதனிடையே, பிரேம்குமாரை ஒருவா் மட்டுமே கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லையென்றும், இதில் மேலும் சிலருக்கு தொடா்பிருப்பதாகவும், அவா்களையும் கைது செய்ய வேண்டுமெனக் கோரி ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாலாந்தரவை பகுதியில் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கினாா். இதை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸாா் கைது செய்து அழைத்துச் சென்றனா். இந்த மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.