உத்தமபாளையத்தில் முடங்கிப்போன குடிநீர் திட்டங்கள்! சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் முறையான பராமரிப்பு இல்லாததால், முடங்கிப்போன குடிநீர்த் திட்டங்களை சீரமைத்து விரைவில்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் முறையான பராமரிப்பு இல்லாததால், முடங்கிப்போன குடிநீர்த் திட்டங்களை சீரமைத்து விரைவில் பயன்பாட்டு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமபாளையம் பேரூராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விசிக்கின்றனர். இப்பேரூராட்சியின் குடிநீர் தேவையை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் லோயர் கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக பூர்த்தி செய்கிறது.
ஆனால், பேரூராட்சியிலுள்ள4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. எனவே, உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் உறை கிணறு அமைத்து, பொதுமக்களின் குடிநீர் தேவை சமாளிக்கப்படுகிறது.
இதற்காக, பேருந்து நிலையம், தாமஸ் காலனி, இ.பி. காலனி, பிடிஆர் காலனி, இந்திரா நகர் பகுதிகளில் அமைக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து பைப் லைன் மூலம் பேரூராட்சி முழுவதும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், இந்த பைப் லைன்கள் அனைத்தும் 30 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டவை என்பதால், தற்போது பி.டி.ஆர் காலனியில் மட்டும் 14 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாக்கடையில் கலக்கிறது. குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, குடிநீர் விநியாகம் செய்ய முடியவில்லை. இதனால், 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்த நிலையில், தற்போது 10 நாள்களுக்கு ஒரு முறை பற்றாக்குறையாகவே விநியோகம் செய்யப்படுகிறது. பல இடங்களில் சாக்கடை நீரானது குடிநீருடன் கலப்பதால் உத்தமபாளையம் பகுதியில் மர்மக் காயச்சல் பரவுகிறது.
குடிநீர் திட்டங்கள் அனைத்தும் முடக்கம்: குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகளால் மேல்நிலை நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலையில், முல்லைப் பெரியாறு மற்றும் லோயர்-கேம்ப குடிநீர் திட்டங்கள் முற்றிலுமாக முடங்கிவிட்டன. மேலும், வார்டுகளிலுள்ள ஆழ்துளைக் கிணறுகளை முறையாக பராமரிப்பு செய்யாததால், அதிலுள்ள மின்மோட்டர்கள் பழுதாகி காட்சிப் பொருளாகக் கிடக்கின்றன. உத்தமபாளையத்தில் குடிநீர் திட்டங்கள் முழுவதும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியது: உத்தமபாளையம் நகர் வழியாக முல்லைப் பெரியாறு மற்றும் கால்வாய்களும் செல்கின்றன.
நீராதாரங்கள் இருந்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு காரணமாகவே குடிநீர் திட்டங்கள் அனைத்தும் முடங்கியதற்கு காரணம் என்றனர். எனவே, உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் குடிநீர் குழாய்களை சீரமைத்து, பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கிட முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தது: நான் செயல் அலுவலராக பெறுப்பேற்று சில நாள்களே ஆகிறது. குடியிருப்பு எண்ணிக்கைக்கேற்ப, குடிநீர் தேவை முழுமை பெற கூடுதலாக 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தும், உடைப்பு பகுதியில் குழாய்களை மாற்றியமைக்கவும் சுமார் ரூ. 1 கோடியில் திட்ட அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்ததும், அதற்கான பணிகள் துவங்கப்படும் கூறினார்.