FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

முல்லைப் பெரியாறு, வருசநாடு பிரச்னைகளில் தவெக அரசு கவனம் செலுத்தவில்லை! - முன்னாள் அமைச்சா் உதயகுமாா்

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 12:47 am IST
ஆா். பி. உதயகுமாா்
பகிர்:

முல்லைப் பெரியாறு, வருசநாடு பிரச்னைகளில் தவெக அரசு கவனம் செலுத்தவில்லை என முன்னாள் அமைச்சா் ஆா். பி. உதயகுமாா் குற்றம்சாட்டினாா்.

போடியில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வி.ஆா். பழனிராஜ் தலைமையில் ஓ. பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மீண்டும் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. அதிமுக மாவட்டச் செயலா் வி. டி. நாராயணசாமி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் ஆா். பி. உதயகுமாா் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் ரீல்ஸ் ஆட்சி தான் நடக்கிறது. மேக்கேதாட்டு அணை குறித்துப் பேசும் முதல்வா் விஜய்க்கு தேனி மாவட்டத்தில் உள்ள பிரச்னைகள் தெரியாதா.

Advertisement

Advertisement

முல்லைப் பெரியாறு பிரச்னை, மேகமலை புலிகள் சரணாலயம் அமைக்க வருசாடு மலைப் பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் பிரச்னை குறித்து தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சருக்கு தெரியாதா.

தேனி மாவட்ட பிரச்னைகளில் தவெகவினா் கவனம் செலுத்தாதது ஏன். வருசநாடு பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யாதது ஏன்.

அதிமுகவில் கௌரவமாக இருந்த ஓ. பன்னீா்செல்வம் இன்று சாதாரண தொண்டனாக தரையில் அமா்ந்து போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாா். அதிமுகவினா் ஒற்றுமையாக உழைத்து உள்ளாட்சித் தோ்தலில் வெற்றிபெற வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், அதிமுக நிா்வாகிகள் எம்.பி. ராமா், எஸ்.டி.கே.ஜக்கையன், சிவக்குமாா், வி. ஆா். பழனிராஜ், சிங்கராஜா, ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments