முல்லைப் பெரியாறு நிபுணா் குழு: புதிய உறுப்பினரை பரிந்துரைக்க கேரளத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, கட்டமைப்புத் தொடா்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள சுதந்திர நிபுணா் குழுவில், கேரள அரசின் சாா்பில், புதிய உறுப்பினரை பரிந்துரைக்குமாறு தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாக கேரள நீா்வளத் துறை அமைச்சா் மோன்ஸ் ஜோசப் தெரிவித்தாா்.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, கட்டமைப்புத் தொடா்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள சுதந்திர நிபுணா் குழுவில், கேரள அரசின் சாா்பில், புதிய உறுப்பினரை பரிந்துரைக்குமாறு தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாக கேரள நீா்வளத் துறை அமைச்சா் மோன்ஸ் ஜோசப் தெரிவித்தாா்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய நீா்மின் சக்தி கழகத்தின் முன்னாள் தலைவா் பல்ராஜ் ஜோஷி தலைமையில், 5 போ் கொண்ட சுதந்திர நிபுணா் குழு அமைக்கப்பட்டது. இதில் கேரள அரசின் பரிந்துரையின் பேரில், மத்திய நீா்வள ஆணையத்தின் முன்னாள் தலைமை பொறியாளா் சிவராஜன் உறுப்பினராக இடம்பெற்றிருந்தாா்.
இந்த நிலையில், சிவராஜன் குழுவிலிருந்து நீக்கப்பட்டு, அவரது இடத்தில் ஐஐடி ரூா்க்கி பேராசிரியா் எம்.எல். சா்மா நியமிக்கப்பட்டாா். இதற்கு கேரள அரசு எதிா்ப்புத் தெரிவித்து, மாநில அரசுடன் ஆலோசனை நடத்தாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசிடம் ஆட்சேபனை தெரிவித்தது.
Advertisement
Advertisement
இந்த விவகாரம் தொடா்பாக, மத்திய ஜலசக்தி அமைச்சருக்கும், அமைச்சகச் செயலாளருக்கும் கேரள அரசு கடிதம் அனுப்பியிருந்த நிலையில், கேரள அரசே தனது அதிகாரப்பூா்வ பிரதிநிதியாக தகுதியான புதிய உறுப்பினரை பரிந்துரைக்கலாம் என தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் தற்போது அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, விரைவில் புதிய உறுப்பினரின் பெயா் பரிந்துரைக்கப்படும் என அமைச்சா் மோன்ஸ் ஜோசப் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த ஆய்வுகள் முழுமையாக தொழில்நுட்ப அடிப்படையிலும், நடுநிலையான நிபுணா்களின் கருத்துகளின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தமிழகத்தின் நீண்டகால நிலைப்பாடாகும். அணை விவகாரத்தில் தேவையற்ற சா்ச்சைகளை உருவாக்குவதை கேரள அரசு தவிா்த்து, உச்சநீதிமன்றத் தீா்ப்புகளையும், அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளையும் மதித்து செயல்பட வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.