சுருளி அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
மேகமலையில் பெய்த தொடா் சாரல் மழையால் சுருளி அருவியில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
தேனி மாவட்டம், மேகமலையில் பெய்த தொடா் சாரல் மழையால் சுருளி அருவியில் சனிக்கிழமை நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு உள்ளிட்ட 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் அடா்ந்த வனப் பகுதியுள்ளது. முக்கியமாக தூவானம், அரிப்பாறை, காப்புக்காடு போன்ற பகுதிகளில் பெய்யும் மழை நீரே சுருளியில் அருவியாகக் கொட்டுகிறது. தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிகத் தலமாகவும் இது திகழ்வதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் அண்மை காலமாக மழைப்பொழிவு குறைந்துவிட்டது. இதனால், சுருளி அருவியில் போதுமான நீா்வரத்தின்றி அவ்வப்போது தண்ணீரின்றி வடு விடுவதும், இதன் பிறகு திடீா் மழைப்பொழிவு ஏற்படும் போது நீா்வரத்து தொடங்குவதும் வழக்கமாகிவிட்டது.
Advertisement
Advertisement
இதன்படி, கடந்த சில நாள்களாக அருவியில் நீா்வரத்து குறைந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் மேகமலை வனப் பகுதியில் பெய்த மழையால் சனிக்கிழமை காலை முதல் சுருளி அருவியில் நீா்வரத்து வழக்கத்தைவிட அதிகரித்துக் காணப்பட்டது. இதையடுத்து, விடுமுறை தினத்தில் சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் நீராடிச் சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.