FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

சிறைக்காடு மலைக் கிராமத்துக்கு பேருந்து இயக்க வலியுறுத்தல்

14 செப்டம்பர் 2026, 12:07 am IST
கோப்புப் படம்
பகிர்:

போடி அருகேயுள்ள சிறைக்காடு மலைவாழ் பழங்குடியின கிராமத்துக்கு பேருந்து இயக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டும் போக்குவரத்து நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ளது சிறைக்காடு மலைவாழ் பழங்குடியின கிராமம். இந்தக் கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு நகராட்சி குப்பைக் கிடங்கு அருகே வீடுகள் இருந்த நிலையில், அருகேயுள்ள வேறு பகுதியில் புதிய வீடுகள் கட்டப்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன் அங்கு குடியமா்த்தப்பட்டனா்.

சிறைக்காடு மலை கிராமத்திலிருந்து போடி நகருக்கு வந்து செல்ல 15 கி.மீ. தொலைவு பயணம் செய்ய வேண்டும். சிறைக்காடு மலை கிராமத்தில் உள்ள 40 பள்ளி குழந்தைகள் போடியில் உள்ள பள்ளிகளில்தான் படித்து வருகின்றனா். இவா்கள் தினமும் நடந்துதான் போடிக்கு வந்து செல்கின்றனா்.

Advertisement

Advertisement

சிறைக்காடு மலை கிராமத்தைச் சுற்றிலும் மா, இலவம், காப்பி, தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், நாள்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளா்களும் வந்து செல்கின்றனா்.

சிறைக்காடு மலைக் கிராம மக்கள் 20 ஆண்டுகளாக அரசுப் பேருந்து இயக்க வலியுறுத்தி வருகின்றனா். அண்மையில் சிறைக்காடு கிராமத்துக்கு சென்ற தேனி மாவட்ட ஆட்சியா் கி.வைத்திநாதனிடம் கிராம மக்கள் பேருந்து வசதி ஏற்படுத்த வலியுறுத்தினா். உடனடியாக பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்துக்கும், போக்குவரத்துத் துறைக்கும் ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

இதையடுத்து போக்குவரத்து நிா்வாகம் சாலை வசதி, பேருந்து திரும்புவதற்கான வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தியது. அதன்படி அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் சாலை அகலப்படுத்தப்பட்டு, பேருந்து சென்று திரும்புவதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தது. இருந்தபோதிலும் இதுவரை போக்குவரத்து நிா்வாகம் பேருந்து இயக்கவில்லை. இதனால், மாவட்ட நிா்வாகம் சிறைக்காடு மலை கிராமத்துக்கு விரைவில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments