ஏழாயிரம்பண்ணைப் பகுதி மருந்தகங்களில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்யக் கோரிக்கை
ஏழாயிரம்பண்ணை பகுதி மருந்தகங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏழாயிரம்பண்ணை பகுதி மருந்தகங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சிக்குள்பட்டது ஏழாயிரம்பண்ணை, பழைய ஏழாயிரம்பண்ணை, சிவசங்குபட்டி, ரெட்டியபட்டி, சாமிதேவன்பட்டி, ஊத்துப்பட்டி, முத்தாண்டியாபுரம், பாண்டியாபுரம் உள்ளிட்ட கிராமங்கள். இந்த கிராமத்தினர் சிகிச்சைக்காக ஏழாயிரம்பண்ணையில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்கின்றனர்.
மேலும் நோயின் தாக்கம் அதிகரித்து மேல் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டுமானால் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாத்தூர் அல்லது கோவில்பட்டிக்குத் தான் அவர்கள் செல்ல வேண்டும். இக்கிராமப் பகுதிகளில் வசிப்பவர்கள் கூலித் தொழிலாளிகளாகவும், பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களாகவும் தான் அதிகமானோர் உள்ளனர்.
இந்நிலையில் இப்பகுதியில் வசிப்பவர்கள் காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி உள்ளிட்டவற்றுக்கு அவசர தேவைக்காக மருத்துவரின் ஆலோசனையின்றி இப்பகுதிகளில் உள்ள மருந்துக்கடைகளில் அக்கடைகாரர் கொடுக்கும் மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனிடையே இப்பகுதியில் உள்ள சிறிய அளவிலான 3 மருந்துக்கடைகளும் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா எனத் தெரியவில்லை என இப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த மருந்துக்கடைகளில் நோயாளிகள் மருந்துகள் வாங்கும் போது காலாவதியான மருந்துகள் விற்கப்படுவதாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் கூறுகின்றனர். மருந்துகளை வாங்குபவர்களும் மருந்தின் பெயர்களை படிக்கத் தெரியாததால், அவற்றை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதனால் அவர்கள் பல்வேறு பக்கவிளைவுகளுக்கு ஆளாகின்றனர். எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் ஆய்வு நடத்தி உரிய மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்கவும், மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏழாயிரம்பண்ணை கிராமத்தினரும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஏழாயிரம்பண்ணை பகுதியை சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தினர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையே நாட வேண்டியுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனை பெயரளவில் மட்டும் தான் உள்ளது. இதனால் இப்பகுதியினர் மருத்துவரின் உரிய ஆலோசனை இல்லாமலும், மருந்துச்சீட்டு இல்லாமலும் மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். மேலும் இம்மருந்துக்கடைகளில் இப்பகுதி பொதுமக்களுக்கு ஊசியும் போடப்படுகிறது. இந்த பகுதிக்கு சுகாதாரத்துறையினர் வருவதேஇல்லை. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுபற்றி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ஏழாயிரம்பண்ணைப் பகுதியில் காலாவதியான மருந்துகள் விற்பனை குறித்து இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை. அவ்வாறு காலாவதியான மருந்துகள் விற்கப்படுவதாக தெரிய வந்தால் முறையான ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.