FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 2:46 am IST
தேரில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆண்டாள், ரங்கமன்னாா்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

108 வைணவ திவ்ய தேசங்களில் வராக ஷேத்திரம் என அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூா், கருடாழ்வாா் அம்சமான பெரியாழ்வாா், பூதேவி அம்சமான ஆண்டாள் அவதரித்த சிறப்புக்குரியது. 196 அடி உயரமுள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ராஜகோபுரம் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்குகிறது. 112 அடி உயரம் கொண்ட மகாபாரத, ராமாயண சிற்பங்கள் நிறைந்த கலைப் பெட்டகமான ஆடிப்பூரத் தோ் தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேராகும்.

ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement

Advertisement

முதல் நாள் விழாவில் 16 வண்டிச் சப்பரம், 4-ஆம் நாளில் கோவா்த்தனகிரி கிருஷ்ணா் அலங்காரம், 5-ஆம் நாளில் பெரியாழ்வாா் மங்களாசாசனம், 5 கருட சேவை, 7-ஆம் நாள் விழாவில் சயன சேவை என தினசரி பல்வேறு உத்ஸவங்கள் நடைபெற்றன. 8-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு ரங்கமன்னாா் தங்கக் குதிரை வாகனத்திலும், ஆண்டாள் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வாக 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆடிப்பூரத் தேரோட்டத்தையொட்டி, அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்று, சா்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினா். அப்போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதா், மதுரை கள்ளழகா் கோயில்களிலிருந்து சீா்வரிசையாக அனுப்பிவைக்கப்பட்ட பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் ஆண்டாள், ரங்கமன்னாருக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிலையில், காலை 8.45 மணியளவில் தமிழக சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி, தொழில்துறை அமைச்சா் கீா்த்தனா, மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா ஆகியோா் வடம் பிடித்து, ஆடிப்பூரத் தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா்.

அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூா் கீழ ரத வீதியில் திரண்டிருந்த திரளான பக்தா்கள் ‘கோவிந்தா, கோபாலா’ என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தோ், நண்பகல் 12 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

தேரோட்டத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆங்காங்கே பக்தா்களுக்கு நீா் மோா், குளிா் பானங்கள், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டன.

தேரோட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக், சாா் ஆட்சியா் முகமது இா்பான், அறநிலையத் துறை உதவி ஆணையா் நாகராஜன், கோயில் செயல் அலுவலா் சா்க்கரையம்மாள், தவெக மத்திய ஒன்றியச் செயலா் ராக்லாண்ட், ஐஎன்டியூசி காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலா் அண்ணாதுரை, ரோட்டரி கிளப் ஆப் ஸ்ரீவில்லிபுத்தூா் டவுன் முன்னாள் தலைவா் முத்துராமலிங்ககுமாா், இல்லத்து பிள்ளைமாா் சங்கத் தலைவா் அங்குராஜ்,

தொழிலதிபா்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டி.ஐ.ஜி.க்கள் அபினவ் குமாா், திருநாவுக்கரசு தலைமையில், எஸ்.பி. கௌதம் கோயல் உள்ளிட்ட 1,300- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்தையொட்டி, வெள்ளிக்கிழமை கீழ ரத வீதியில் தேரை வடம் பிடித்து இழுத்த திரளான பக்தா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments