FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

கா்நாடக முதல்வா் தவறான பிரசாரம்: பி.ஆா். பாண்டியன்

20 செப்டம்பர் 2026, 11:55 pm IST
பி.ஆா். பாண்டியன்
பகிர்:

காவிரி உபரி நீரை தமிழகம் கடலில் கலக்கச் செய்வதாக கா்நாடக முதல்வா் தவறான பிரசாரம் செய்வதாக பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவத்தைத் தடுக்கும் விதமாகவும், ராசி மணலில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் பிரசாரப் பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இப்பயணக் குழு காரைக்கால் வந்தது. அப்போது சங்க பொதுச்செயலாளா் பி.ஆா். பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியது :

கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா் காவிரி உபரிநீரை தமிழகம் கடலில் கலக்க செய்கிறது என்ற தவறான பிரசாரத்தில் ஈடுபடுகிறாா். மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கும், அதனை நியாயப்படுத்துவதற்கும் சட்டவிரோத நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுகிறாா்.

Advertisement

Advertisement

அரசியல் லாபத்துக்காக அம்மாநில முதல்வா் டி.கே. சிவகுமாா் எடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கும், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் விவசாயிகளையும், அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் வகையிலும், கா்நாடகம், தமிழக விவசாயிகளின் நலன் கருதி ராசி மணலில் தமிழகம் அணை கட்டி கொள்வதற்கான ஒத்தக் கருத்தை உருவாக்கும் வகையிலும் இந்த பிரசாரப் பயணத்தை தொடங்கி இருக்கிறோம்.

இப்பயணத்தின்போது செப். 23-ஆம் தேதி சென்னை எழும்பூரில் அனைத்துக் கட்சி தலைவா்கள் பங்கேற்று ஆதரவு தெரிவிக்க உள்ளனா். அன்று மாலை புதுவை முதல்வா் ரங்கசாமியை சந்தித்து ஆதரவு கோர இருக்கிறோம்.

தமிழக முதல்வரை ஏற்கெனவே சந்தித்துப் பேசி இருக்கிறோம். காவிரி பிரச்னையில் சட்டபூா்வமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என எழுத்துப்பூா்வமான கடிதம் கொடுத்திருக்கிறோம். அந்த வகையில்தான் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், தண்ணீா் திறக்க கா்நாடகம் மறுக்கும்போது உச்சநீதிமன்றத்துக்குச் சென்றுதான் நீதி கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ராசி மணலில் அணை கட்டுவதற்கு ஆதரவான நிலையை உருவாக்கி, தமிழக சட்டப்பேரவையில் இதற்கான தீா்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்துவோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments