FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தில்லி பல்கலைக்கழக தேர்தலில் 43% வாக்குப்பதிவு! இன்று வாக்கு எண்ணிக்கை

தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் புதன்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் புதன்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. புதன்கிழமை மாலை 7.30 மணிவரை சுமார் 43.8 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் கிங்ஸ்வே கேம்பில் உள்ள சமூதாய நலக் கூடத்தில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 43 சதவீத வாக்குகள் பதிவாகின. முக்கிய பதவிகளை காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்எஸ்யுஇ கைப்பற்றியிருந்தது.
 தில்லி பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளில் அமைக்கப்பட்ட 52 வாக்குப் பதிவு மையங்களில் மாணவர்கள் புதன்கிழமை காலை 8.30 மணி முதல் கூடி தங்கள் வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தினர். காலை நேர கல்லூரிகளுக்கு 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை நேர கல்லூரிகளுக்கு மாலை 3 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. நார்த் கேம்பஸில் மட்டும் சுமார் 700 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
சுமார் 700 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டன. தில்லி பல்கலைக்கழகத்தின் மூத்த ஊழியர்களே தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர், துணைத் தலைவர், செயலர், இணைச் செயலர் ஆகிய பதவிகளுக்காக நடைபெற்ற இந்தத் தேர்தலில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன. மொத்தம் 1.35 லட்சம் மாணவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 
காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ), பாஜகவின் ஆதரவு பெற்ற அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி), ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் அமைப்பான சத்ரா யுவா சங்கர்ஷ் சமிதி (சிஒய்எஸ்எஸ்), இடதுசாரி மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கம் (ஏஐஎஸ்ஏ) உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
இதில் இடதுசாரி மாணவர் சங்கமும் (ஏஐஎஸ்ஏ), ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் சங்கமும்  (சிஒய்எஸ்எஸ்) முதல் முறையாக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.
இதில் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு ஏஐஎஸ்ஏவும், செயலர், இணைச் செயலர் பதவிக்கு சிஒய்எஸ்எஸ்வும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். இதனால் இந்தத் தேர்தலில் மும்முனைப்போட்டி நிலவுகிறது.

தலைவர் பதவிக்கான முக்கிய வேட்பாளர்கள்
சன்னி சில்லர்        (என்எஸ்யுஐ)
அன்கிவ் பயசோனியா    (ஏபிவிபி)
அபிகியான்         (ஏஐஎஸ்ஏ - சிஒய்எஸ்எஸ்) 

துணைத் தலைவர் பதவி
லீனா         (என்எஸ்யுஐ)
சக்தி சிங்         (ஏபிவிபி)
அன்ஷிகா         (ஏஐஎஸ்ஏ - சிஒய்எஸ்எஸ்) 

Advertisement

Advertisement

மாணவர்களின் கோரிக்கை
*    முன்பு அளித்த வாக்குறுதியான புதிய மாணவர் விடுதிகள் கட்டித்தர வேண்டும்
*    மெட்ரோவில் பாஸ் வழங்கப்பட வேண்டும்
*    கல்லூரி வளாகங்களில், ரவுடி, அடிதடி சம்பவங்கள் தடுக்கப் பட வேண்டும்
*    24 மணி நேரமும் நூலகம் செயல்பட வேண்டும்
*    பெண்களுக்கு பாதுகாப்பான பகுதியாக மாற்றப்பட வேண்டும்
*    தூய்மையான பகுதியாக்கப்பட வேண்டும்
*    விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சிறந்த சேவைகள் வழங்கப்பட வேண்டும்
*    சில கல்லூரி வகுப்புகளில் மின்வசிறி வசதி கூட இல்லை. இது போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்
*    சில கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால் மாணவர்களுக்கு சரியான சேவைகளை வழங்குவதில்லை. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.


தேர்தல் வாக்குறுதிகள்
என்எஸ்யுஐ 
*    சிறந்த பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை
*    ரூ. 10 -க்கு மதிய உணவு 
ஏபிவிபி
*    பெண்கள், சமூக நீதி நடவடிக்கைகளுக்கு பட்ஜெட்டில் 50% நிதி செலவிடப்படும்
*    கல்லூரி வளாகங்களில் சானிட்டரி நேப்கின்கள் விநியோகிக்கும் இயந்திரங்கள் அமைக்கப்படும்
*    விளையாட்டுகளை மேம்படுத்துவதில் கவனம்
*    ஒரு பாடத்துக்கு அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்க நடவடிக்கை
சிஒய்எஸ்எஸ்
*    கல்வி வியாபாரமயமாக்கப்படுவது தடுக்கப்படும்
*    சிசிடிவி கேமராக்கள் நிருவப்படும்
*    காவல் மையங்கள் அமைக்கப்படும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments