மருத்துவ வசதிக் குறைபாடு: பாபு ஜகஜீவன் ராம் மருத்துவமனைக்குதில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்
தில்லியில் உள்ள பாபு ஜெகஜீவன் ராம் அரசு மருத்துவனையில் மகப்பேறுக்கு பிந்தைய வசதிகள் குறைவாக
தில்லியில் உள்ள பாபு ஜெகஜீவன் ராம் அரசு மருத்துவனையில் மகப்பேறுக்கு பிந்தைய வசதிகள் குறைவாக இருப்பதாக பெண்களிடமிருந்து வரப் பெற்ற புகார்களின் பேரில் அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பான விவகாரத்தை தில்லி மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தில்லி மகளிர் ஆணையம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், "பிரசவத்திற்கு பிந்தைய வசதிகள் குறைவாக இருப்பதாகவும், பெண்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியிருப்பதாகவும் புகார்கள் வரப் பெற்றுள்ளன. நோயாளிகளின் உறவினர்கள் தரையில் தூங்க வைக்கப்படுகின்றனர். மனிதத் தன்மையின்றி நடத்தப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தில்லி மகளிர் ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில், "சிசேரியன் சிகிச்சைக்குப் பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் பெண்கள், மருத்துவமனையின் தரையில் தூங்க வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உரிய படுக்கை வசதிகள் தரப்படுவதில்லை. மருத்துவமனையில் உள்ள மின்தூக்கிகள் செயல்படவில்லை என்றும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நோயாளிகள் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தை ஆணையம் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளது. இந்த விவகாரத்தில் உண்மை நிலவர அறிக்கையை தருமாறு மருத்துவமனையிடமிருந்து கேட்கப்பட்டுள்ளது. இதுதவிர, தவறான நிர்வாகத்திற்கான பொறுப்புக்குரிய அதிகாரிகள் குறித்த தகவலைத் தெரிவிக்குமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரச்னைகளை சரி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறித்தும் கேட்கப்பட்டுள்ளது' என்றனர்.
இதுதொடர்பாக தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறுகையில், "பிரசவத்திற்கு பின்பு பெண்கள் தரையில் படுக்குமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகத் தெரிய வருகிறது. இது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும். மருத்துவமனையால் ஏழைப் பெண்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படுவதில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனையிடமிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது' என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.