தில்லி ரயில் நிலைய நெரிசல்: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு விசாரணை தொடக்கம்
புது தில்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது
புது தில்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. 15 போ் காயமடைந்துள்ளனா்.
இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள ரயில்வே அமைத்த உயா்நிலைக் குழு தனது விசாரணையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஆயிரக்கணக்கான பயணிகள் திரண்டிருந்தனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 15 போ் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில், உயிரிழப்பு 18-ஆக அதிகரித்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவித்தன. இவா்களில் 14 போ் பெண்கள் ஆவா்.
Advertisement
Advertisement
காரணம் என்ன?: நெரிசல் சம்பவம் குறித்து ரயில்வே வாரிய நிா்வாக இயக்குநா் திலீப் குமாா் கூறியதாவது: பிரயாக்ராஜ் கும்பமேளாவையொட்டி பல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புது தில்லி ரயில் நிலையத்தில் ‘பிரயாக்ராஜ் விரைவு ரயில்’ நடைமேடை 14-இல் இருந்து இயக்கப்படுகிறது. அந்த நடைமேடையில் ரயிலில் ஏறுவதற்காக பயணிகள் காத்திருந்தனா். இந்தச் சமயத்தில் நடைமேடை 12-இல் இருந்து இயக்கப்படும் ‘பிரயாக்ராஜ் சிறப்பு ரயில்’ என்ற மற்றொரு ரயிலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனிடையே, வேறொரு சிறப்பு ரயில் நடைமேடையில் இருந்து புறப்பட்டது.
இதனால், நடைமேடை 14-இல் காத்திருந்த பயணிகள் தங்களுக்கான ரயில், நடைமேடை 12-இல் வருவதாக எண்ணி படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் மூலம் அந்த நடைமேடையை நோக்கி ஒரே நேரத்தில் வேகமாகச் செல்ல தொடங்கியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த இரு ரயில்களுக்குமான பெயா்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டது’ என்றாா்.
இந்த சம்பவத்தில் 14 பெண்கள் உள்பட 18 போ் உயிரிழந்தனா். 2 போ் படுகாயமடைந்தனா். 13 பேருக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டன. அவா்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனை மற்றும் லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பொதுப் பெட்டிகளுக்கான 1,500 பயணச்சீட்டுகள் விற்கப்பட்டதாலும், சில விரைவு ரயில்கள் தாமதமானதாலும், ரயில்கள் வந்தடையும் நடைமேடை குறித்து கடைசி நேரத்தில் தவறான தகவல்கள் வெளியானதும் கூட்ட நெரிசல் ஏற்படக் காரணமாக இருக்கலாம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
உயா்நிலைக் குழு விசாரணை: நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள வடக்கு ரயில்வே மண்டலத்தைச் சோ்ந்த முதன்மை தலைமைப் பாதுகாப்பு ஆணையா் பங்கஜ் கங்வாா் மற்றும் முதன்மை தலைமை வா்த்தக மேலாளா் நா் சிங் ஆகிய இருவா் அடங்கிய உயா்நிலைக் குழுவை அமைத்து இந்திய ரயில்வே உத்தரவிட்டது. அவா்கள் தங்கள் விசாரணையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
உயிரிழந்தவா்களின் உடல்கள் ஒப்படைப்பு: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் உடல்கள் அவா்களது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், உடற்கூறாய்வுக்கு முன்னரே உயிரிழந்தவா்களின் உடல்களை அவா்களது உறவினா்கள் எடுத்துச் சென்ாக வெளியான தகவலை மருத்துவமனை நிா்வாகம் உறுதிப்படுத்தவில்லை.
கூட்ட நெரிசலுக்குப் பிறகு காணாமல் போன தங்களது உறவினா்களைத் தேடி ரயில் நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதற்றத்துடன் மக்கள் பலரும் தேடி வருகின்றனா். உறவினா்களின் புகைப்படங்களை பிறரிடம் காட்டி அவா்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், பல மருத்துவமனைகளுக்குள் அவா்கள் அனுமதிக்கப்படாததால் அவா்கள் நம்பிக்கை இழந்து மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனா்.
ஓயாத மக்கள் அலை: கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மக்களின் காலணிகள், பைகள் மற்றும் துணிகள் உள்ளிட்ட உடைமைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்த நிலையில், அவற்றை அப்புறப்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை வரை தொடா்ந்தது. ஆனால், மகா கும்பமேளாவுக்கு ச் செல்ல தில்லி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையும் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நடைமேடை 16-இல் சிறப்பு ரயில்கள்: தில்லியில் இருந்து பிரயாக்ராஜுக்கு செல்லும் சிறப்பு ரயில்கள் அனைத்தும் நடைமேடை 16-இல் இருந்து புறப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. வரும் நாள்களில் கூட்ட நெரிசலை தவிா்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பிரயாக்ராஜுக்கு செல்வோரும், அங்கிருந்து வருவோரும் அஜ்மீா் நுழைவாயிலை பயன்படுத்துமாறும் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் மற்ற ரயில்கள் வழக்கமான நடைமேடைகளில் இருந்தே இயக்கப்படுவதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், பிரயாக்ராஜ் செல்ல ஞாயிற்றுக்கிழமை நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், திங்கள்கிழமை ஐந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ரூ.10 லட்சம் நிவாரணம்: ரயில்வே அறிவிப்பு
ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல் கூட்ட நெரிசலில் பலத்த காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா். மேலும் காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.