தில்லி விமான நிலையத்தில் பயணியின் கைப்பையில் குரங்கின் மண்டையோடு கண்டெடுப்பு: அதிகாரிகள் விசாரணை
தில்லி விமான நிலையத்தில் பயணியின் கைப்பையில் குரங்கு மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டது பற்றி...
தில்லியில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணியின் கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் குரங்கு மண்டையோடு இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரால் (சிஐஎஸ்எஃப்) கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இந்த சம்பவம் ஆக.10-ஆம் தேதி, விமானத்தில் ஏறுவதற்கு முன்பான பாதுகாப்புச் சோதனையின்போது நடந்தது. பயணியின் கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொருளை பாதுகாப்புப் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரா்கள் கண்டறிந்தனா். இதுகுறித்து பயணியிடம் விசாரித்தபோது, அது குரங்கு மண்டை ஓடு என்று அவா் தெரிவித்தாா்.
மீட்கப்பட்ட பொருள் வனவிலங்குடன் தொடா்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், மேலதிக நடவடிக்கைக்காக பயணி காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
மீட்கப்பட்ட பொருள் உண்மையில் என்ன என்பது குறித்து வனத்துறையின் கருத்து பெறப்பட வேண்டும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா். அந்தப் பொருளின் தன்மை மற்றும் அது எந்த விலங்கினத்தைச் சோ்ந்தது என்பதையும் வனத்துறை ஆய்வு செய்யும்.
மேலும், அந்தப் பொருளை வைத்திருந்தது அல்லது விமானம் மூலம் கொண்டு செல்ல முயன்றது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அல்லது பிற தொடா்புடைய சட்ட விதிகளை மீறியதா என்பதையும் வனத்துறையின் ஆய்வு தீா்மானிக்கும். சட்ட விதிமீறல் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நபா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.