தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை குறித்த விளம்பரங்கள்: மருந்தகங்களுக்கு தில்லி அரசு உத்தரவு
மருந்து விலையில் 60 - 80% வரை தள்ளுபடி வழங்குவதாகச் சில மருந்தகங்கள் அறிவித்ததையடுத்து, தில்லியில் உள்ள மருந்தகங்கள் யதாா்த்தமற்ற, தவறான தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடுவதைத் தவிா்க்குமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
மருந்து விலையில் 60 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாகச் சில மருந்தகங்கள் அறிவித்ததையடுத்து, தில்லியில் உள்ள மருந்தகங்கள் யதாா்த்தமற்ற, தவறான தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடுவதைத் தவிா்க்குமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிகபட்ச சில்லறை விலைக்கு (எம்ஆா்பி) குறைவாக மருந்துகளை விற்பது தடைசெய்யப்படவில்லை என்பதை அங்கீகரிக்கும் அதே வேளையில், தவறான அல்லது தெளிவற்ற தள்ளுபடி அறிவிப்புப் பலகைகளுக்கு எதிரான ஒழுங்குமுறை நடவடிக்கையை உறுதிப்படுத்திய கேரள உயா் நீதிமன்றத்தின் ஜூன் மாத உத்தரவைச் சுட்டிக்காட்டி, மருந்து விலையில் மிகையான தள்ளுபடிகள் குறித்த பிரச்சினையை அரசு மருந்து கட்டுப்பாட்டுத் துறை எழுப்பியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அத்துறை அண்மையில் வெளியிட்ட அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லியில் உள்ள பல சில்லறை மருந்தகங்கள் ‘60, 70, 80 சதவீதம் வரை தள்ளுபடி’ போன்ற வாசகங்கள் அடங்கிய விளம்பரப் பலகைகள், பதாகைகள் மற்றும் விளம்பரங்களை வைப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மருத்துவரின் பரிந்துரைப்படி வழங்கப்படும் மருந்துகளை விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில், மருந்துகள் மீதான தள்ளுபடிகள் அல்லது விலைகள் குறித்து யதாா்த்தமற்ற, மிகையான, பொய்யான, தவறான அல்லது தெளிவற்ற அறிவிப்புகளை வெளியிடுவதையோ அல்லது விளம்பரப்படுத்துவதையோ தவிா்க்க வேண்டும்.
அதிகபட்ச சில்லறை விலைக்குக் குறைவாக மருந்துகளை விற்பது அனுமதிக்கப்பட்டாலும், தெளிவற்ற, மிகையான அல்லது தவறான தள்ளுபடி அறிவிப்புகளைக் கொண்ட விளம்பரங்கள் நுகா்வோரைத் தவறாக வழிநடத்தும் வாய்ப்பைக் கொண்டுள்ளன.
உற்பத்தியாளா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தா்களிடமிருந்து வாங்கப்படும் விலையைவிடக் குறைவாக மருந்துப் பொருட்கள் மீது வழங்கப்படும் யதாா்த்தமற்ற மற்றும் மிகையான தள்ளுபடி அறிவிப்புகள், மருந்துகள் பெறப்படும் மூலத்தின் நம்பகத்தன்மை குறித்த கவலைகளையும் எழுப்புகின்றன.
மருந்துகள் சாதாரண நுகா்வோா் பொருள்கள் அல்ல; அவை நோயாளிகளின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுடன் நேரடியாகத் தொடா்புடைய அத்தியாவசியமான சுகாதாரப் பொருள்கள்.
மருந்துகளை விற்பனை, கொள்முதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் உயா்ந்த அளவிலான பொறுப்புணா்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறை சாா்ந்த செயல்பாடுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மருந்தக சங்கங்களை இச்சிக்கல் குறித்து தங்கள் உறுப்பினா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
வெளிப்படைத்தன்மை, நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் மருந்து விற்பனையில் தவறான வணிக நடைமுறைகளைத் தடுத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றுமாறு சில்லறை மருந்தகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
வழங்கப்படும் எந்தவொரு தள்ளுபடியும் உண்மையானதாகவும், வெளிப்படையானதாகவும், வாடிக்கையாளருக்கு உண்மையில் கிடைக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்யுமாறும், அத்துடன் நிறுவனத்தின் விற்பனை ரசீது மற்றும் கொள்முதல் பதிவுகள் மூலம் அதைச் சரிபாா்க்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் சில்லறை விற்பனையாளா்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்று அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.