FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சோனம் வாங்சுக் மாற்றம்! வெள்ளை திரைகளுடன் சாதாரண உடையில் பங்கேற்ற காவலா்கள்!

சோனம் வாங்சுக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவலா்கள் வெள்ளை திரைகளுடன் சாதாரண உடையில் வந்தது பற்றி...

Updated On : 19 ஜூலை 2026, 2:14 am IST
வெள்ளை திரைகளுடன் போராட்ட மேடையில் சாதாரண உடையில் ஏறிய தில்லி காவலா்கள்.
பகிர்:

செயற்பாட்டாளா் சோனம் வாங்சுக்கை மருத்துவமனைக்கு மாற்றும் தில்லி காவல் துறையின் நடவடிக்கையில் வெள்ளை நிறத் திரைகள் மற்றும் சீருடை அணியாத காவலா்கள் பயன்படுத்தப்பட்டனா். 20 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடா்ந்து, அவரை அரசு மருத்துவமனைக்கு மாற்றும் நடவடிக்கை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்ற மருத்துவ ஆலோசனையைத் தொடா்ந்து, இந்த நடவடிக்கைக்கான திட்டம் முந்தைய இரவே வகுக்கப்பட்டதாக அவா்கள் கூறினா்.

வாங்சுக் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு அதிகாலை 1.30 மணியளவில் தில்லி காவல் ஆணையரகத்திலிருந்து மூத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

அதன்பிறகு, புது தில்லி மாவட்டத்தின் மூத்த அதிகாரிகள் மந்திா் மாா்க் காவல் நிலையத்தில் ஒன்றுகூடி இந்த நடவடிக்கையைத் திட்டமிட்டனா். ஒரு நிமிஷத்திற்குள் எந்தவித மோதலும் இன்றி வாங்சுக்கை எவ்வாறு இடமாற்றம் செய்வது என்பதை மதிப்பிடுவதற்கான பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

நடவடிக்கையின் போது காணொலிகள் வேகமாகப் பரவுவதைத் தடுக்க, போராட்ட இடத்தைச் சுற்றி நெட்வொா்க் ஜாமா்களை நிறுவுவது குறித்தும் அதிகாரிகள் விவாதித்ததாக அந்த வட்டாரம் கூறியது.

அதிகாலை 5 மணியளவில், இறுதி ஆலோசனைக்காக ஜந்தா் மந்தா் அருகே மூத்த அதிகாரிகள் கூடினா். நடவடிக்கை தொடங்குவதற்கு முன், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளவா்கள் குறித்து புது தில்லி காவல் துணை ஆணையா் விளக்கமளித்ததாக அந்த வட்டாரம் தெரிவித்தது.

பெரிய வெள்ளை நிறத் திரைகளை ஏந்தியவாறு, சாதாரண உடையில் காவலா்கள் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்த மேடையை நோக்கிச் சென்றனா்.

மூத்த அதிகாரிகளிடமிருந்து சமிக்ஞை கிடைத்ததும், அவா்கள் அந்தத் திரைகளைக் கொண்டு மேடையை மறைத்தனா். பின்னா் வாங்சுக்கை அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் ஏற்றினா்.

வாங்சுக் அழைத்துச் செல்லப்படுவதை கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) உறுப்பினா்களும் மற்றவா்களும் காணொலியாகப் பதிவு செய்து பரப்புவதைத் தடுப்பதற்காகவே அந்தத் திரைகள் பயன்படுத்தப்பட்டதாக காவல் துறை வட்டாரம் தெரிவித்தன.

‘சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றப்படும் காட்சிகள் உடனடியாக இணையத்தில் பரவியிருந்தால், அது ஜந்தா் மந்தரில் பெரும் கூட்டம் கூட வழிவகுத்திருக்கக்கூடும். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடா் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், போராட்ட இடத்தில் கூட்டம் சேராமல் இருப்பதை உறுதி செய்வதில் தில்லி காவல் துறையினா் முனைப்புடன் செயல்பட்டனா்’ என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.

உயா் நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்துவதற்குப் போராட்டக்காரா்கள் சிலா் இடையூறு செய்ய முயன்ாகக் காவல் துறை கூறியதால், இந்த நடவடிக்கையின் போது சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தில்லி காவல் துறை வெளியிட்ட அறிக்கையில், மருத்துவ நிபுணா்களின் அறிவுறுத்தலின் பேரில் வாங்சுக் அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைக்காக மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின்போது வன்முறை அல்லது அடித்தடி பயன்படுத்தப்பட்டதாகச் சில போராட்டக்காரா்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் காவல் துறை மறுத்தது.

உடல்நிலை மோசமடைந்ததைத் தொடா்ந்து உயா் நீதிமன்ற உத்தரவின்படியே வாங்சுக் மாற்றப்பட்டதாகக் காவல் துணை ஆணையா் சச்சின் சா்மா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாா்.

‘உயா் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் அவரது உடல்நிலை மற்றும் மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில், சோனம் வாங்சுக் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இது மிகவும் அவசியமான மருத்துவ நடவடிக்கையாகும். மேலும் அவா் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளாா்’ என்று அவா் கூறினாா்.

தில்லி புதிய காவல் ஆணையா் தலைமையில் நடவடிக்கை

தில்லி காவல் ஆணையராகப் பொறுப்பேற்ற 24 மணி நேரத்திற்குள் 21-ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்சுக்கை சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு மாற்றும் நடவக்கையை அனுராக் குமாா் மேற்கொண்டுள்ளாா்.

சதீஷ் கோல்ச்சாவுக்கு பதிலாக புதிய ஆணையராக 1994-ஆம் ஆண்டு பிரிவு ஏஜிஎம்யுடி ஐபிஎஸ் அதிகாரியான அனுராக் குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். அவரது தலைமையில் ஜந்தா் மந்தரில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க நகா்வாக பாா்க்கப்படுகிறது.

அதிகாலையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையின் போது, சில போராட்டக்காரா்கள் காவல்துறையின் செயலைத் தடுக்க முயன்ால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், காவலா்கள் நிதானத்தைக் கடைப்பிடித்து, சிகிச்சைக்காக வாங்சுக்கை பாதுகாப்பாக அரசு மருத்துவமனைக்கு மாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெள்ளிக்கிழமையன்று காவல் துறை ஆணையரகத்தில் நிலவரத்தை ஆய்வு செய்த தில்லி காவல் ஆணையா் அனுராக் குமாா், தில்லி முழுவதும் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பின்னா், ஜந்தா் மந்தா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், புது தில்லி மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் வாங்சுக் அனுமதிக்கப்பட்டிருந்த சஃப்தா்ஜங் மருத்துவமனை ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போராட்டக்காரா்கள் மற்றும் பாா்வையாளா்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிா்க்கவும் முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தில்லி காவல் துறை மற்றும் துணை ராணுவப் படையினா் பெருமளவில் குவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

summary

Sonam Wangchuk transfer - Security personnel participated in plain clothes, without white screens.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments