தர்மேந்திர பிரதான் பதவி விலகு! - சோனம் வாங்சுக்கின் போராட்டம் கலைக்கப்பட்டதற்கு பெ. சண்முகம் கண்டனம்!
சோனம் வாங்சுக் மற்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டம் கலைக்கப்பட்டதற்கு பெ. சண்முகம் கண்டனம்...
மத்திய அரசுக்கு எதிராக சோனம் வாங்சுக் நடத்தி வந்த போராட்டம் கலைக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஜூன் 20 முதல் தில்லியின் ஜந்தர் மந்தரில் சோனம் வாங்சுக் மற்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
கடந்த ஜூன் 28 முதல் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் கடைபிடித்து வந்த நிலையில், 21 அவது நாளான இன்று (ஜூலை 18) காலை தில்லி காவல் துறையினர் அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், ஜந்தர் மந்தரில் இருந்த போராட்டக்காரர்கள் மீதும் தடியடிகள் நடத்தப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சோனம் வாங்சுக் மற்றும் அபிஜீத் தீப்கே தலைமையிலான போராட்டம் கலைக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செயலர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“தில்லி காவல்துறையினரால் சோனம் வாங்சுக் மற்றும் அபிஜித் திப்கே ஆகியோர் கைது செய்யப்பட்டதற்குச் சிபிஐ(எம்) கடும் கண்டனம்!
நீட் வினாத்தாள் கசிவு ஊழலுக்குக் காரணமான கல்வி மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க முதுகெலும்பு இல்லாத மோடி அரசு, அதற்கு எதிராக ஜனநாயக முறையில் போராடிய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் அபிஜித் திப்கே ஆகியோரைக் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
நியாயமான எதிர்ப்புக் குரல்களை லத்திகள் மூலமும், அராஜகக் கைதுகள் மூலமும் நசுக்கப் பார்க்கும் இந்த ஜனநாயக விரோத, சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கல்வி அமைச்சரின் தோல்வியை மறைக்கப் போராடுபவர்கள் மீது ஏவப்படும் இந்த கோழைத்தனமான அடக்குமுறைக்கு எதிராக, நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகச் சக்திகளும் வீதிக்கு வந்து போராட வேண்டும்.
ஜந்தர் மந்தரிலிருந்து எழப்போகும் இந்த உழைக்கும் வர்க்க இளைஞர்களின் புரட்சிப் பேரலை, உங்கள் அதிகாரச் சிம்மாசனத்தின் அஸ்திவாரத்தையே உலுக்கித் தகர்க்கும்! அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்! தர்மேந்திர பிரதான் உடனே பதவி விலகு!” எனக் கூறியுள்ளார்.
CPIM has condemned the dismantling of the protest led by Sonam Wangchuk against the Central Government.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.