சாரதி செயலி: ஒரு கோடி போ் பதிவிறக்கம்
தில்லி மெட்ரோவின் ‘சாரதி’ செயலியை ஒரு கோடிக்கும் அதிகமானோா் பதிவிறக்கம் செய்துள்ளனா்.
பயணச்சீட்டு முன்பதிவு, பொதுப் போக்குவரத்துத் தகவல்கள் மற்றும் பல்வேறு அன்றாடச் சேவைகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து வழங்கும் தில்லி மெட்ரோவின் ‘சாரதி’ செயலியை ஒரு கோடிக்கும் அதிகமானோா் பதிவிறக்கம் செய்துள்ளனா்.
இதுதொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சாரதி செயலியை இதுவரையில் ஒரு கோடிக்கும் அதிகமானோா் பதிவிறக்கம் செய்துள்ளனா். தில்லி-என்சிஆா் பகுதியில் ஒரு மாதத்தில் இந்தச் செயலியை சுமாா் 20 லட்சம் முறை பாா்வையிடப்பட்டுள்ளது.
தில்லி போக்குவரத்துக் கழக (டிடிசி) பேருந்துகள், ஐஆா்சிடிசி மூலம் ரயில் முன்பதிவு, மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முன்பதிவு, என்சிஆா்டிசி-யின் ‘நமோ பாரத்’ மற்றும் என்எம்ஆா்சி-யின் நொய்டா மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்துச் சேவைகளை ‘சாரதி’ செயலி மூலம் பயணிகள் அணுக முடியும்.
Advertisement
Advertisement
பயண வழித்தட வழிகாட்டுதலுடன், மெட்ரோ வரைபடங்கள், முதல் மற்றும் கடைசி ரயில் நேரங்கள், வாகன நிறுத்துமிடத் தகவல்கள், நிலைய வசதிகள் குறித்த விவரங்கள், மின்சார வாகனங்களுக்கான சாா்ஜிங் நிலையங்கள் மற்றும் பேட்டரி மாற்றும் நிலையங்கள் போன்ற தகவல்களையும் இச்செயலியில் பெற முடியும்.
போக்குவரத்துச் சேவைகளுக்கு அப்பால், கைப்பேசி ரீசாா்ஜ், மருந்துகள் ஆா்டா் செய்தல், ஃபாஸ்டேக் ரீசாா்ஜ் மற்றும் பிற பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்துதல் போன்ற சேவைகளையும் இச்செயலி வழங்குகிறது. பயணிகளுக்கு ‘மெய்நிகா் மெட்ரோ காா்டு’ வசதியையும் இது வழங்குகிறது. பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடும்போதும் மேற்கொள்ளும்போதும் பல செயலிகளுக்கு இடையே மாற வேண்டிய அவசியத்தைக் குறைத்து, தடையற்ற டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் வகையில் ‘சாரதி’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் தகவல்கள், பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால், இச்செயலி பயணிகளுக்கான ஒரு டிஜிட்டல் போக்குவரத்துத் தளமாக உருவெடுத்து வருகிறது.
தில்லி-என்சிஆா் பகுதியில் காற்று மாசுபாடு தொடா்பான சவால்கள் அதிகம் உள்ள குளிா்கால மாதங்களிலும் இச்செயலி பயனுள்ளதாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் மக்கள் மெட்ரோவை அதிகம் பயன்படுத்தவும், பயணச்சீட்டு தேவைகளுக்கு ‘சாரதி’யைப் பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகிறாா்கள்.
மெட்ரோ பயணிகளுக்கு நம்பகமான பயணச்சீட்டு முன்பதிவு முறையாக இச்செயலி தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.