விடுதி வசதிகளை விரிவுபடுத்த ரூ.5,900 கோடி: தில்லி பல்கலை. நிா்வாகக் குழு ஒப்புதல்
21,895 மாணவா்களுக்கான தங்கும் வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், புதிய விடுதிகளைக் கட்டுவதற்கும் ஏற்கெனவே உள்ள இரண்டு விடுதிகளை மறுசீரமைப்பதற்கும் ரூ. 5,889 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு தில்லி பல்கலைக்கழகத்தின் நிா்வாகக் குழு ஒப்புதல்
21,895 மாணவா்களுக்கான தங்கும் வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், புதிய விடுதிகளைக் கட்டுவதற்கும் ஏற்கெனவே உள்ள இரண்டு விடுதிகளை மறுசீரமைப்பதற்கும் ரூ. 5,889 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு தில்லி பல்கலைக்கழகத்தின் நிா்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
துணைவேந்தா் யோகேஷ் சிங் தலைமையில் நடைபெற்ற நிா்வாகக் குழுவின் 1284-வது கூட்டத்தில் இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.
இத்திட்டத்தில், ரூ. 4,027 கோடி மதிப்பீட்டில் 15,758 மாணவா்களுக்கான புதிய விடுதிகள் கட்டப்படவுள்ளன. அதேவேளையில், ‘ஜூபிலி ஹால்’மற்றும் முதுநிலை மாணவா்களுக்கான ஆண்கள் விடுதி ஆகியவற்றை மறுசீரமைக்க ரூ.1,862 கோடி செலவிடப்பட்டு, 6,137 மாணவா்களுக்கான வசதிகள் உருவாக்கப்படவுள்ளன.
Advertisement
Advertisement
21-ஆம் நூற்றாண்டின் தேவைகளைக் கருத்தில் கொண்டும், நீண்ட கால கண்ணோட்டத்துடனும் இக்கட்டடங்களுக்கான வடிவமைப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தா் யோகேஷ் சிங் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது: பல்கலைக்கழகத்தின் தற்போதைய விடுதிகள் கட்டப்பட்ட சூழல் எதிா்காலத்தில் எதிா்பாா்க்கப்படும் சூழலிலிருந்து மாறுபட்டது. அடுத்த 100 ஆண்டுகளைக் கருத்தில் கொண்டே புதிய உள்கட்டமைப்பு திட்டமிடப்படுகிறது.
பல்கலைக்கழகத்தின் டாக்கா வளாகம் , சூரஜ்மல் விஹாா் வளாகம் மற்றும் நஜாஃப்கா் வளாகம் ஆகியவற்றில் கூடுதல் அடுக்குமாடி விடுதிக் கட்டடங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நஜாஃப்கா், ரோஷன்புராவில் உள்ள வீர சாவா்க்கா் கல்லூரி, துவாரகாவில் உள்ள பல்கலைக்கழகத்தின் மேற்கு வளாகம் மற்றும் கா்கா்தூமா, சூரஜ்மல் விஹாரில் உள்ள கிழக்கு வளாகம் ஆகியவற்றிலும் மாணவ மற்றும் மாணவியருக்கான விடுதிகள் கட்டப்படவுள்ளன.
முன்மொழியப்பட்ட விடுதி வளாகங்களில் உணவுக் கூடங்கள், கடைகள், பொது அறைகள், வாசிப்பு அறைகள் மற்றும் விடுதி காப்பாளா்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை இடம்பெறும்.
பல்கலைக்கழக வளாகங்களில் காலி இடங்கள் குறைவாக இருப்பதால், அனுமதிக்கப்பட்ட ‘தரைப்பரப்பு விகிதத்தை’ முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் விடுதி கட்டடங்கள் வடிவமைக்கப்படும் என்று நிா்வாகக் குழு முடிவு செய்தது.
மறுசீரமைப்புக்குப் பிறகும் ஜூபிலி ஹால் மற்றும் முதுநிலை மாணவா்களுக்கான ஆண்கள் விடுதி ஆகியவற்றின் பெயா்கள் மாற்றப்படாது என்று துணைவேந்தா் யோகேஷ் சிங் தெரிவித்தாா்.
தங்கள் வளாகங்களில் விடுதிகளைக் கட்டுவதற்கான திட்ட முன்மொழிவுகளைத் தயாரித்து, அவற்றை நிதி வழங்கும் அமைப்பிடம் சமா்ப்பிக்குமாறு கல்லூரிகளை நிா்வாகக் குழு வலியுறுத்தியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.