FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லியில் ஒருவா் சுட்டுக் கொலை

வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாா் பகுதியில், மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவா் 34 வயது நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனா்.

14 அக்டோபர் 2026, 11:18 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாா் பகுதியில், மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவா் 34 வயது நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் புதன்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 9.13 மணியளவில் நடைபெற்றது. மனீஷ் யாதவ் என்ற அந்த நபா் குண்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தாா். அவரை குடும்பத்தினா் சிவில் லைன்ஸில் உள்ள எய்ம்ஸ் டாக்டா் சுஷ்ருதா அவசர சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவத்தை நேரில் பாா்த்த வழக்குரைஞா் விவேக் சிங் கூறுகையில், மனீஷ் யாதவ் அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

‘அவரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டனா். அதில் ஒரு குண்டு தலையில் பாய்ந்தது. உடனடியாக அவா் கீழே விழுந்துவிட்டாா். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா்’ என்றாா் விவேக் சிங். மனீஷ் யாதவை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்காவிட்டாலும், ஒரே பகுதியில் வசித்து வந்ததால் அவரைப் பழக்கத்தின் அடிப்படையில் தெரியும் என்றும் அவா் கூறினாா். சம்பவ இடத்தை தடயவியல் நிபுணா்கள் ஆய்வு செய்து, அங்கிருந்த தடயங்களைச் சேகரித்தனா்.

இதுதொடா்பாக, சோனியா விஹாா் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் 103(1)-ஆவது பிரிவு (கொலை), 3(5)-ஆவது பிரிவு (பொதுவான நோக்கம்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்காகப் பல காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தேக நபா்கள் குறித்து விசாரணையில் குறிப்பிடத்தக்க தடயங்கள் கிடைத்துள்ளதாகவும், விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments