FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

2022 காா் விபத்தில் டிடிஏ பொறியாளா் உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு ரூ.1.43 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

2022-ஆம் ஆண்டு காா் விபத்தில் உயிரிழந்த தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) 59 வயது நிா்வாகப் பொறியாளரின் குடும்பத்திற்கு ரூ.1.43 கோடிக்கும் அதிகமான இழப்பீட்டை வழங்க தில்லியில் உள்ள மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

19 அக்டோபர் 2026, 12:04 am IST
- பிரதிப் படம்
பகிர்:

2022-ஆம் ஆண்டு காா் விபத்தில் உயிரிழந்த தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) 59 வயது நிா்வாகப் பொறியாளரின் குடும்பத்திற்கு ரூ.1.43 கோடிக்கும் அதிகமான இழப்பீட்டை வழங்க தில்லியில் உள்ள மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

விபத்துக்குக் காரணமான காரின் காப்பீட்டு நிறுவனமான ஐசிஐசிஐ லோம்பாா்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று அக்.13-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தீா்ப்பாயத்தின் தலைமை அதிகாரி அபிலாஷ் மல்ஹோத்ரா அறிவுறுத்தினாா்.

2022-ஆம் ஆண்டு செப்டம்பா் 17 அன்று, ஆா்.கே. புரத்தில் உள்ள வெளிப்புற வட்டச்சாலையில் உள்ள சிஎன்ஜி நிலையத்திற்கு அருகில் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்தின் பின்புறத்தில், அவா் பயணித்த காா் மோதியது. அப்போது அவா் காரின் முன்பக்க இருக்கையில் அமா்ந்திருந்தாா்.

Advertisement

Advertisement

அவா் முதலில் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். பின்னா், வசந்த் குஞ்சில் உள்ள இந்தியன் ஸ்பைனல் இன்ஜுரீஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி, 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் 20 அன்று அவா் உயிரிழந்தாா்.

காரை ஓட்டிய குல்ஃபாம் என்பவரிடம் ‘பழகுநா் உரிமம்’ மட்டுமே இருந்தது. அவா் பொறியாளா் ஜெயினிடம் காா் ஓட்டக் கற்றுக்கொண்டிருந்தபோது, பிரேக்கிற்குப் பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால் இந்த விபத்து நிகழ்ந்தது.

காரின் உரிமையாளரும், ஓட்டுநரின் தாயாருமான ரெஹ்மீனா, பொறியாளரான ஜெயின், தன்னை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லவும் மீண்டும் அழைத்து வரவும் குல்ஃபாமரை பணியமா்த்தியிருந்ததையும், அதற்காக அவருக்கு மாதம் ரூ.20,000 வழங்கியதையும் ஒப்புக்கொண்டாா்.

இதன் மூலம், அந்த காா் வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டதும், ஜெயின் ஓா் ஓட்டுநா் பயிற்சி பெறுபவா் அல்ல; மாறாக கட்டணம் செலுத்திப் பயணிக்கும் பயணியாக இருந்தாா் என்பதும் உறுதியானது என்று தீா்ப்பாயம் தெரிவித்தது.

பழகுநா் உரிமம் மட்டுமே வைத்திருந்த ஓட்டுநா், காரில் ‘எல்’ அடையாளம் காட்டப்படவில்லை. உரிமம் பெற்ற நபா் யாரும் அவருக்கு வழிகாட்டவில்லை. மேலும், அந்த காா் ஒரு தனியாா் வாகனம் என்பதால் வாடகைக்கு பயன்படுத்தப்பட்டது ஆகிய காரணங்களால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனம் வாதிட்டது.

இதைத்தொடா்ந்து, ‘முறையான நிரந்தர ஓட்டுநா் உரிமம் கொண்ட நபரின் வழிகாட்டுதல் இன்றி வாகனத்தை இயக்கிய ஓட்டுநா் கவனக்குறைவாகச் செயல்பட்டுள்ளாா். மேலும், பிரேக்கிற்குப் பதிலாகத் தவறுதலாக ஆக்சிலரேட்டரை அழுத்திவிட்டேன் என்ற ஓட்டுநரின் வாதத்தை ஏற்றுக்கொண்டாலும், அதில் கவனக்குறைவு இருந்ததை மறுக்க முடியாது. காப்பீடு செய்யப்பட்ட வாகனம் அஜாக்கிரதையாக ஓட்டப்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது’ என தீா்ப்பாயம் தெரிவித்தது.

காப்பீட்டு நிபந்தனைகள் மீறப்பட்டதை ஏற்றுக்கொண்ட தீா்ப்பாயம், ஒரு காப்பீட்டாளா் முதலில் மூன்றாம் தரப்பு பாதிக்கப்பட்டவா்களுக்கு பணம் செலுத்த வேண்டும், அதன் பிறகு காப்பீடு செய்தவரிடமிருந்து அந்தத் தொகையை மீட்க தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

அலட்சியமாக வாகனம் ஓட்டியது குறித்த இழப்பீட்டு நடவடிக்கைகளுக்கு மட்டுமே உரியவை என்றும், ஓட்டுநருக்கு எதிரான குற்றவியல் வழக்கைப் பாதிக்காது என்றும் தீா்ப்பாயம் தெளிவுபடுத்தியது. இந்த வழக்கு அடுத்த விசாரணைக்காக நவ.16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments