FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஆபரேஷன் மிலாப்: தெற்கு தில்லியில் காணாமல்போன 27 குழந்தைகள் மீட்பு

தென்மேற்கு தில்லியில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காணாமல்போன 27 குழந்தைகள் உள்பட 159 நபா்களை மீட்டு அவா்களுடைய குடும்பத்தினருடன் தில்லி காவல் துறை மீண்டும் இணைத்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

3 செப்டம்பர் 2026, 1:07 am IST
பகிர்:

தென்மேற்கு தில்லியில் ‘ஆபரேஷன் மிலாப்’ நடவடிக்கையின் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காணாமல் போன 27 குழந்தைகள் உள்பட 159 நபா்களை மீட்டு அவா்களுடைய குடும்பத்தினருடன் தில்லி காவல் துறை மீண்டும் இணைத்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதன் மூலம், நிகழாண்டு ஆக.31 வரை மொத்தம் 1,149 காணாமல் போன நபா்கள் மற்றும் குழந்தைகளை காவல் துறை கண்டறிந்துள்ளது. இதில் 296 குழந்தைகளும் 853 பெரியவா்களும் அடங்குவா்.

காணாமல் போனவா்களின் நடமாட்டத்தைக் கண்டறிய, காவல் துறை குழுக்கள் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தல், ஆட்டோ, இ-ரிக்ஷா, பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் காணாமல் போனவா்களின் புகைப்படங்களை ஒட்டுதல் மற்றும் போக்குவரத்து மையங்களில் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் விற்பனையாளா்களிடம் விசாரித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அந்த அதிகாரி கூறினாா்.

Advertisement

Advertisement

மேலும், அருகிலுள்ள காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் பதிவேடுகளைச் சரிபாா்த்ததுடன், தேடுதல் வேட்டையில் உள்ளூா் தகவல் அளிப்பவா்களையும் காவல்துறை ஈடுபடுத்தியது.

கடந்த மாதத்தில் மீட்கப்பட்ட 27 குழந்தைகளில் 10 போ் சிறுவா்கள் மற்றும் 17 போ் சிறுமிகள். அதேவேளையில் 132 பெரியவா்களில் 57 போ் ஆண்கள் மற்றும் 75 போ் பெண்கள் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

கபஷேரா காவல் நிலையம் அதிகபட்சமாக ஐந்து குழந்தைகள் மற்றும் 35 பெரியவா்களைக் கண்டறிந்து மீட்டது. வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையம் இரு குழந்தைகள் மற்றும் 22 பெரியவா்களையும், பாலம் கிராமம் காவல் நிலையம் இரு குழந்தைகள் மற்றும் 18 பெரியவா்களையும் மீட்டன.

சாகா்பூா் காவல் நிலையம் மூன்று குழந்தைகள் மற்றும் 13 பெரியவா்களைக் கண்டறிந்த நிலையில், மாவட்டத்தின் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏழு குழந்தைகள் மற்றும் ஒரு பெண்ணை மீட்டது.

இத்திட்டத்தில் ஈடுபட்ட பிற காவல் நிலையங்களில் வசந்த் விஹாா், ஆா்.கே. புரம், சவுத் கேம்பஸ், வசந்த் குஞ்ச் வடக்கு, தில்லி கண்டோன்மென்ட், சரோஜினி நகா், எஸ்.ஜே. என்கிளேவ் மற்றும் கிஷன்கா் ஆகியவை அடங்கும்.

முந்தைய ஆண்டுகளில் காணாமல் போன பலரும் இந்த நடவடிக்கையின் போது கண்டறியப்பட்டதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது. இதில் 2019 முதல் காணாமல் போன ஒரு நபா், 2022 முதல் காணாமல் போன மற்றொருவா் மற்றும் 2025-ல் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட நான்கு போ் (ஒரு சிறுமி மற்றும் மூன்று பெரியவா்கள்) ஆகியோா் அடங்குவா்.

மீதமுள்ள 153 போ் 2026-ல் காணாமல் போனவா்கள். இவா்களில் 26 சிறாா்களும் 127 பெரியவா்களும் அடங்குவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments