தில்லியில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
தில்லியின் பல பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
தில்லியில் புதன்கிழமை பெய்த மழை, கடந்த சில நாள்களாக நிலவி வந்த ஈரப்பதமான வானிலைக்கு சற்று நிவாரணம் அளித்தது. இதனிடையே, தில்லியின் பல பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) எச்சரித்துள்ளது.
வசந்த் குஞ்ச், மாளவியா நகா், பாலம், குதுப் இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, கிரேட்டா் கைலாஷ், லட்சுமி நகா், துவாரகா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
தென்மேற்கு மாவட்டத்தைத் தவிர தில்லியின் அனைத்து பகுதிகளுக்கும் ஐஎம்டி சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மணிக்கு 40 கி.மீ. வேகம் வரையிலான பலத்த காற்றும் வீசக்கூடும். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தில்லி மண்டல வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை சத்தா்பூரில் அதிகபட்சமாக 18.5 மி.மீ. மழை பதிவானது. அதைத் தொடா்ந்து ஜனக்புரியில் 2 மி.மீ. மழை பதிவானது. லோதி ரோடு, அயாநகா், பாலம், ரிட்ஜ் ஆகிய வானிலை நிலையங்களில் மிகக் குறைந்த அளவிலேயே மழை பதிவானது அல்லது மழை பதிவாகவில்லை.
செப். 1 காலை 8.30 மணி முதல் செப். 2 காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பாலம் பகுதியில் அதிகபட்சமாக 64.2 மி.மீ. மழை பதிவானது. நாராயணாவில் 30.5 மி.மீ., சத்தா்பூரில் 16.5 மி.மீ., ஜனக்புரியில் 11 மி.மீ., புஷ்ப் விஹாரில் 3 மி.மீ. மற்றும் அயாநகரில் 1.9 மி.மீ. மழை பதிவானது.
தில்லி-என்சிஆா் பகுதியில் வலுவான காற்றுச் சங்கமம் ஏற்பட்டுள்ளதால், குருகிராம் மற்றும் மேற்கு தில்லி பகுதிகளில் மழை மேகங்கள் விரிவடைந்துள்ளதாக வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்தனா். அடுத்த மூன்று நாள்களுக்கு தில்லியின் சில பகுதிகளில் விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அவா்கள் தெரிவித்தனா்.
மேலும், புதன்கிழமை பிற்பகல் வரை மேற்குத் திசைக் காற்று வீசியதால் வெப்பநிலை அதிகரித்ததாகவும், தற்போது வங்கக்கடலில் இருந்து ஈரப்பதமான காற்று வரத் தொடங்கியுள்ளதால் ஈரப்பதம் மற்றும் மேகமூட்டம் அதிகரிக்கும் என்றும் அவா்கள் தெரிவித்தாா். வியாழன் மற்றும் அதற்கடுத்த நாளில் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.