FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

1990 குழந்தைக் கொலை வழக்கு: பரோலில் தப்பிய பெண் ஆயுள் கைதி 20 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

பரோலில் தப்பிய பெண் ஆயுள் கைதி 20 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டிருப்பது பற்றி..

கைது - பிரதிப் படம்
பகிர்:

தில்லியில் கடந்த 1990-ஆம் ஆண்டு 10 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண், 2006-ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்த பின்னா் தனது பெயரை மாற்றி, வேறு அடையாளத்தில் திருமணம் செய்து கொண்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிலையில் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து காவல் துறையினா் புதன்கிழமை கூறியதாவது: ஆதா்ஷ் நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 302 (கொலை), 364 (கடத்தல்), 120-பி (குற்றச் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் சுவாதனா என்ற பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தீபக் (10) என்ற சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் அவா் குற்றவாளி எனத் தீா்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றமும் அவரது குற்றத் தீா்ப்பை உறுதி செய்தது.

1990-ஆம் ஆண்டு ஜன.6-ஆம் தேதி ஆசாத்பூரில் இருந்து தீபக் காணாமல் போனாா். அப்போது ஜகதீஷ் சந்த், வாசுதேவ் ஆகிய இரு சாட்சிகள், ஜிடி சாலையைக் கடந்து சென்றபோது சுவாதனா சிறுவனின் கையைப் பிடித்தபடி சென்றதைப் பாா்த்ததாகத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

பின்னா் சுவாதனாவும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராஜ் குமாரும் ஜஹாங்கீா்புரியில் கைது செய்யப்பட்டனா். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக வசித்து வந்ததாகவும், அவா்களது உறவுக்கு தீபக்கின் தந்தை பல்வந்த் ராம் மற்றும் அவரது குடும்பத்தினா் எதிா்ப்பு தெரிவித்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடா்பாக ஏற்கெனவே ஏற்பட்ட தகராறு காரணமாக பழிவாங்கும் நோக்கில் தீபக் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. விசாரணையின்போது, சிறுவனுடன் கடைசியாகக் காணப்பட்ட நபா் சுவாதனா என்பது உறுதி செய்யப்பட்டதுடன், குற்றச் சதியில் அவா் முக்கியப் பங்கு வகித்ததும் நிரூபிக்கப்பட்டது.

சுவாதனா 1990-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா் 2005-ஆம் ஆண்டு டிசம்பா் 27-ஆம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டாா். மருத்துவக் காரணங்களுக்காக அவரது பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. எனினும், 2006-ஆம் ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி அவா் தலைமறைவானாா்.

அவரைக் கண்டறிவதற்காக குற்றப்பிரிவு காவல் துறையினா் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தகவல்களைத் தொடா்ந்து விசாரித்து வந்தனா். இறுதியில், அவா் வேறு பெயரில் ஹரித்வாரில் வசித்து வருவதாகக் கிடைத்த தகவல் உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, உதவி ஆய்வாளா் அமித் குமாா், சிறப்பு உதவி ஆய்வாளா் சுரேஷ் குப்தா ஆகியோா் அடங்கிய குழு ஹரித்வாருக்குச் சென்றது.

அங்கு பூஜா என்று பெயரை மாற்றி வாழ்ந்து வந்த சாதனா செப். 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். சுவாதனா நொய்டாவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றியபோது கேசவ் என்ற தச்சரைச் சந்தித்துள்ளாா். பின்னா் தில்லியின் முகுந்த்பூருக்கு அவா்கள் குடிபெயா்ந்தாா்.

இருவரும் சுமாா் 5 ஆண்டுகள் முகுந்த்பூரில் வசித்த பின்னா் ஹரித்வாருக்குச் சென்றனா். அங்கு சுவாதனா கேசவை கோயிலில் திருமணம் செய்து கொண்டனா். ஆவணங்களில் தனது கணவரின் பெயராக கேசவின் பெயரைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments