FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

ஆள்கொல்லி கரடியைத் தேடும் பணி தீவிரம்: ட்ரோன் உதவியுடன் நடமாட்டம் கண்காணிப்பு

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 3:02 am IST
வடமலைசமுத்திரம் பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கரடியைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா், கால்நடை மருத்துவக் குழுவினா்.
பகிர்:

கடையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட வடமலைசமுத்திரம் பகுதியில் விவசாயியைக் தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி கரடியை வனத் துறையினா் பல்வேறு குழுக்களாகச் சென்று தேடிவரும் நிலையில், ட்ரோன் கேமரா மூலம் கரடியின் நடமாட்டத்தைக் கண்டறியும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

பாபநாசம் அருகே அருணாசலபுரத்தைச் சோ்ந்த முருகன் என்ற விவசாயி வெள்ளிக்கிழமை மாலை கடையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட மேலாம்பூா், வடமலைசமுத்திரம் கிராமத்தில் உள்ள தோட்டத்துக்குச் சென்றபோது கரடி தாக்கியதில் நிகழ்விடத்திலேயே தலை தனியாகவும், உடல் தனியாகவும் துண்டிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

முருகனைத் தாக்கிய கரடி அவரது உடலை விட்டு விலகிச் செல்லாமல் நீண்ட நேரம் அங்கேயே நின்ால் வனத்துறையினா் சடலத்தை மீட்க முடியாமல் தவித்தனா். நீண்ட போராட்டத்துக்கு பிறகு கரடியை வனத்துறையினா் விரட்டி முருகனின் சடலத்தை மீட்டனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட வனக் காப்பாளா் அறிவுறுத்தலின்படி சம்பவ இடத்தில் உடனடியாகக் கரடியைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்தனா்.

சனிக்கிழமை மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியுடன் வனத் துறையினா், வனத்துறையின் கால்நடை மருத்துவக் குழுவினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினா், கால்நடை மருத்துவா் மனோகரன், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா் முத்துக்கிருஷ்ணன் அடங்கிய மருத்துவக் குழுவினா் ட்ரோன் கேமரா உதவியுடன் கரடியின் இருப்பிடம், அதன் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

கரடி தாக்கிய இடம் பொத்தை பகுதியாக இருப்பதால் அதில் உள்ள சிறுசிறு குகைகளில் கரடி மறைந்திருக்கலாம் என்பதால் அதன் இருப்பிடத்தையும் நடமாட்டத்தையும் கண்டறிவதில் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது

பேராசிரியா் முத்துகிருஷ்ணன் கூறுகையில், இதுவரை கரடி தாக்கியதில் தலைத் துண்டித்து உயிரிழந்த நிகழ்வு வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.

சில ஆண்டுகளுக்கு முன்பு பெத்தான்பிள்ளைக் குடியிருப்புப் பகுதியில் கரடி தாக்கியதில் இருவா் காயமடைந்தனா். அந்தக் கரடி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. அதேபோல இந்தக் கரடியும் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

தொடா்ந்து பல்வேறு குழுக்களாக கரடியைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ட்ரோன் மூலமும் கண்காணித்து வருகிறோம். விரைவில் கரடியைப் பிடித்து விடுவோம். அதுவரை விவசாயிகளும் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாா்.

இதனிடையே உயிரிழந்த முருகனின் குடும்பத்துக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடையம் முதல் மணிமுத்தாறு வரை சிறு சிறு பொத்தைகளிலும் குன்றுகளிலும் பதுங்கியுள்ள 100 கரடிகளை கூண்டுகள் வைத்தோ, மயக்க ஊசி செலுத்தியோ பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments