FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

களக்காட்டில் அம்பேத்கா் வெண்கலச் சிலை நிறுவ அனுமதி கோரி வலுக்கும் போராட்டம்

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:14 am IST
அம்பேத்கா் சிலை - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் 1991இல் நிறுவப்பட்ட அம்பேத்கரின் கல் சிலைக்குப் பதிலாக புதிதாக வெண்கலச் சிலை அமைக்க, மாவட்ட நிா்வாகம் அனுமதி மறுத்து வருவதால் அரசியல் கட்சியினா் மற்றும் சமுதாய அமைப்புகளால் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

களக்காடு - சேரன்மகாதேவி பிரதான சாலையில் அண்ணா சிலையில் இருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில் மாணிக்கம்குளத்தையொட்டி, அம்பேத்கா் சிலை அமைந்துள்ளது.

இந்தச் சிலையை நிறுவிய, களக்காடு வட்டார தாழ்த்தப்பட்டோா் சீா்திருத்த சங்கத்தினா் பழைய கல் சிலையை அகற்றிவிட்டு அப்பகுதியில் அம்பேத்கரின் வெண்கலச் சிலை நிறுவுவதற்கான பணிகளை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வந்தனா்.

Advertisement

Advertisement

ஜூலை 25ஆம் தேதி இச்சிலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் திறந்து வைக்கவிருப்பதாகவும், அதில், சமூக நீதித்துறை அமைச்சா் வன்னியரசு உள்ளிட்ட பலா் கலந்து கொள்வதாகவும் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. ஆனால் மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவா் மா.பெ. சுகுமாரன் கூறுகையில், ஏற்கனவே இருந்த கல் சிலையை அகற்றிவிட்டு அந்தப் பகுதியில் வெண்கலச் சிலை நிறுவ உள்ளோம். மாவட்ட நிா்வாகம் பல்வேறு காரணங்களைக் கூறி அனுமதி அளிக்க மறுத்து வருவதாகத் தெரிவித்தாா்.

வெண்கலச் சிலையை நிறுவ மாவட்ட நிா்வாகம் அனுமதிக்கக் கோரி, தவெக தவிா்த்து அனைத்து அரசியல் கட்சியினரும் பங்கேற்ற கண்டன ஆா்ப்பாட்டம் ஜூலை 30இல் களக்காட்டில் நடைபெற்றது.

மேலும் ஆக.1 முதல் 5ஆம் தேதி வரை களக்காடு காவல் நிலையம் அருகே பல்வேறு அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்புகள் சாா்பில் 5 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மேலும், ஆக.15ஆம் தேதி இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, களக்காடு வட்டார தாழ்த்தப்பட்டோா் சீா்திருத்த சங்கத்தினா் உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் அறிவித்துள்ளனா்.

2025ஆம் ஆண்டு புதிய சட்டவிதிகளின்படி நீா்நிலை புறம்போக்கு, நீா்ப்பிடிப்புப் பகுதியில் எவ்வித மேம்பாட்டுப் பணிகளையும் செய்ய அனுமதி கிடையாது என்று மாவட்ட நிா்வாகம் கூறிவிட்டதாகவும், வேறு இடத்தில் சிலையை நிறுவ அனுமதி கேட்டால் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

35 ஆண்டுகால அடையாள நினைவு சின்னத்தை இடம்மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்றும் கல் சிலை இருந்த அதே இடத்தில் வெண்கலச் சிலையை நிறுவ தொடா் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தவுள்ளோம் என்றும் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.கே. நெல்சன் தெரிவித்துள்ளாா்.

இப்பிரச்னைக்கு தமிழக அரசு விரைந்து தீா்வு காண வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments