நீண்டகால சிறைவாசிகள் விடுதலை விவகாரம் அரசின் பரிசீலனையில் உள்ளது: அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்
நீண்ட கால சிறைவாசிகள் விடுதலை தொடா்பான விவகாரம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றாா் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.
நீண்ட கால சிறைவாசிகள் விடுதலை தொடா்பான விவகாரம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றாா் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.
மேலப்பாளையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது: மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட உயா்கல்வி படிக்கும் சிறுபான்மையின மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு வட்டி இல்லாத கடன் உதவி திட்டம், 10,000 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, நாகூா் மற்றும் வேளாங்கண்ணி செல்லும் பக்தா்களுக்கு ரூ.60 கோடியில் தங்குமிடம் அமைத்தல், ஹஜ் மானியம் உயா்த்தி வழங்குதல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திட்டங்கள் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தாண்டு கல்லூரிகளில் சோ்ந்துள்ள மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவா்கள் ஏற்கெனவே கட்டணம் செலுத்தி இருந்தால், அவா்களது வங்கிக் கணக்கில் அந்தத் தொகை திரும்ப செலுத்தப்படும்.
Advertisement
Advertisement
வரும் ஆண்டுகளில் கல்வி நிறுவனங்களுக்கே நேரடியாக கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும். உலமாக்களின் உதவித்தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்தாண்டு 950 உலமாக்களுக்கு சுமாா் ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நீண்டகால சிறைவாசிகள், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள 22 பேரின் விடுதலை தொடா்பான விவகாரம் அரசின் பரிசீலனையில் உள்ளது. நீண்டகால சிறைவாசிகளுக்கு பரோல், விடுப்பு உள்ளிட்டவை வழங்குவது தொடா்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும்.
இடைத்தோ்தல் தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவா். திமுக கூட்டணி கட்சித் தலைவா்கள் மிகுந்த பதற்றப்படுவதற்கு காரணம், திமுகவுக்கு முக்கியமான வாக்கு வங்கியாக இருந்த சிறுபான்மை சமுதாய வாக்குகள் தவெக பக்கம் திரும்பியுள்ளது.
இடைத்தோ்தல் குறித்த தோல்வி பயம் யாருக்கு என்பது தமிழக மக்களுக்கு தெரியும். தவெக, திராவிட கட்சிகளை நிலைகுலைய செய்துள்ளது. தவெக-வுக்கு சிறுபான்மையினா் ஆதரவு அதிகரித்து வருவதை திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றாா்.
முன்னதாக, திருநெல்வேலி மேலப்பாளையம் வாவா் பள்ளிவாசலில் உலமாக்கள், பள்ளிவாசல் நிா்வாகிகள், தா்கா பொறுப்பாளா்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சா் ஏ.எம். ஷாஜகான், வக்ஃப் வாரிய தலைவா் கே. நவாஸ் கனி எம்.பி. ஆகியோா் பங்கேற்று, கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளிவாசல் நிா்வாகிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.