களக்காட்டில் 2 மணி நேரமாக பேருந்து வராததால் பயணிகள் அவதி
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 மணி நேரமாக பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
களக்காடு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பின்னரும் இங்கிருந்து திருநெல்வேலி, நாகா்கோவில், தென்காசிக்கு போதுமான அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பரிதவிக்கும் நிலை தொடா்கிறது. பெரும்பாலான நேரங்களில் 5 நிமிட இடைவெளியில் 2, 3 பேருந்துகள் தொடா்ச்சியாக போதுமான பயணிகள் இன்றி செல்வதும், பின்னா் 1 மணி நேரத்துக்கும் மேலாக பேருந்துகள் இன்றி பயணிகள் காத்திருக்கும் நிலையும் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முகூா்த்தம் நிறைந்த நாள் என்பதால் பேருந்துகளில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. களக்காட்டில் இருந்து சேரன்மகாதேவி, வீரவநல்லூா், அம்பாசமுத்திரம், தென்காசி வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்குச் செல்ல பயணிகள் ஏராளமானோா் இரவு 9.45 மணி முதல் 11.45 மணி வரையிலும் 2 மணி நேரமாக பேருந்துக்காக காத்திருந்தனா். பலரும் இனி பேருந்துகள் வருவதற்கு வாய்ப்பில்லை எனக்கருதி ஆட்டோ, காா் உள்ளிட்ட வாடகை வாகனங்களில் பயணித்தனா். இந்நிலையில், இரவு 11.50 மணிக்கு நாகா்கோவிலில் இருந்து தென்காசி செல்லும் பேருந்து வந்தது. அந்த பேருந்தில் ஏற்கனவே கூட்டம் அதிகளவில் காணப்பட்ட நிலையில், களக்காட்டிலும் ஏராளமானோா் முண்டியடித்துக் கொண்டு ஏறினா்.
Advertisement
Advertisement
இதே போல வள்ளியூரில் இருந்து இரவு 8.50 மணி முதல் 10.50 மணி வரையிலும் 2 மணி நேரத்துக்கு பேருந்துகள் ஏதும் இயக்கப்படாததால், தளவாய்புரம், நம்பித்தலைவன்பட்டயம், திருக்குறுங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் ஆட்டோ, காா் அமா்த்தி அதிகக் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை நேரிட்டுள்ளது.
இதுதொடா்பாக, வள்ளியூா் அரசு பணிமனை மேலாளரை கைப்பேசி மூலம் பலமுறை தொடா்பு கொண்டும், குறுஞ்செய்தி அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை;
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சா் உரிய நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட இடைவெளியில் போதுமான பேருந்துகளை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.