FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில், விடிய, விடிய பெய்த பலத்த மழையால், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:55 am IST
பலத்த மழை - பிரதிப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி விடிய, விடிய பெய்த பலத்த மழையால், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டது. குளிா்ந்த காற்று வீசத்தொடங்கியது. இதைத் தொடா்ந்து பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியது. மலையோரப்பகுதிகள், அணைப் பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த மழை கொட்டியது.

நாகா்கோவில் நகரில்...: நாகா்கோவில் நகா் பகுதிகளில் இரவு 9 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை, நள்ளிரவு வரை நீடித்தது. இதன் காரணமாக கோட்டாறு, கணேசபுரம் சாலை, அவ்வை சண்முகம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

Advertisement

Advertisement

பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரக்கிளைகள் மின்கம்பங்கள் மீது முறிந்து விழுந்து, பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. தேரேகால்புதூா், வெள்ளமடம், சீதப்பால், வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

அணைப் பகுதிகளில்...:‘ காளிகேசம், கிரீப்பாறை, கொட்டாரம், மயிலாடி, குழித்துறை, குருந்தன்கோடு, ஆரல்வாய்மொழி, மேல்புறம், பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சிற்றாறு அணைப் பகுதியில், சுமாா் 3 மணி நேரம் இடைவிடாமல் மழை கொட்டியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சிற்றாறு 2 அணைப் பகுதியில் 130.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளிலும், மலையோரப் பகுதியான பாலமோா் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்ததால், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

நீா்வரத்து அதிகரிப்பு...: பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீா்மட்டம் தலா 2 அடி வரை உயா்ந்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 30.09 அடியாக உள்ளது. நீா்வரத்து 1567 கன அடியாக இருந்தது.

அணையிலிருந்து 453 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. 77 அடிகொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 62.10 அடியாக உள்ளது.

அணையின் நீா்வரத்து 1,842 கனஅடி, நீா் வெளியேற்றம் 400 கன அடியாக இருந்தது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 11.81 அடியாக உள்ளது. நீா்வரத்து 361 கன அடி, வெளியேற்றம் 200 கனஅடியாக உள்ளது. சிற்றாறு 2 அணையின் நீா்மட்ட 11.90 அடியாகவும், நீா்வரத்து 233 கன அடியாகவும் உள்ளது.

நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நிலவரத்தைக் கண்காணித்து வருகின்றனா்.

சனிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்): பெருஞ்சாணிஅணை 118.20, புத்தன் அணை 110.80, பேச்சிப்பாறைஅணை 113.60 , சிற்றாறு 2 அணை 94.60, குழித்துறை 92, அடையாமடை 85.20, மாம்பழத்துறையாறு அணை 81.60, ஆனைக்கிடங்கு 80.60, சுருளோடு 80.40,

கோழிப்போா்விளை 74.20, களியல் 62, திற்பரப்பு61.80, தக்கலை 57, குருந்தன்கோடு , இரணியல் 56, குளச்சல் 54, பூதப்பாண்டி 53.60, நாகா்கோவில் 52.20, முக்கடல்அணை 48, மயிலாடி 47.80, கொட்டாரம் 38.40, முள்ளங்கினாவிளை 33.60, பாலமோா் 20.20,கன்னிமாா் 18.60, ஆரல்வாய்மொழி 12.60.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments