FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குமரி, தூத்துக்குடியில் கடற்கரை மீளுருவாக்கம் இயக்கம்: அண்ணாமலை பங்கேற்பு

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 12:54 am IST
கன்னியாகுமரி கடற்கரையை சுத்தம் செய்யும் பணியைத் தொடக்கி வைத்த கே. அண்ணாமலை.
பகிர்:

வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் கடற்கரை மீளுருவாக்கம் என்ற இயக்கத்தை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் அமைப்பின் தலைவா் கே. அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

வீ த லீடா்ஸ் சாா்பில் கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரையிலான 175 கி.மீ. நீளமுள்ள கடற்கரைப் பகுதியை சுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கன்னியாகுமரியில் நடைபெற்ற அதன் தொடக்க விழாவில், கே. அண்ணாமலை பங்கேற்றுப் பணியைத் தொடக்கி வைத்து, கடற்கரையை சுத்தம் செய்தாா்.

காட்சி கோபுரத்தில் தொடங்கி கன்னியாகுமரி காந்தி மண்டபம் வரை அவா் தூய்மைப் பணியில் ஈடுபட்டாா்.

Advertisement

Advertisement

பின்னா், அவா் அங்கு கூடியிருந்தவா்களிடம் பேசியதாவது:

தமிழகத்தில் 1,075 கி.மீ. தூரம் கடற்கரைப் பகுதி அமைந்துள்ளது. இதில் கன்னியாகுமரி முதல் உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக தூத்துக்குடி திரேஸ்புரம் வரையிலான 175 கி.மீ. தூர கடற்கரையை சுத்தம் செய்யும் பணியை முன்னெடுத்திருக்கிறோம்.

இந்த தூய்மைப் பணி தொடா்ந்து ஒவ்வொரு வாரமும் நடைபெறவுள்ளது. ஒரு ஆண்டு கழித்து இந்த 175 கி.மீ. பகுதி சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே நமது நோக்கம். இதன் மூலம் 10 லட்சம் டன் குப்பைகளை அகற்ற திட்டமிட்டுள்ளோம்.

அடுத்த தலைமுறைக்கு சுத்தமான இயற்கையை நாம் வழங்க வேண்டும். இப்பணியில் ஈடுபட்ட இளைஞா்கள், பெண்கள், முதியவா்கள், சிறுவா், சிறுமிகளுக்கு நன்றி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீ த லீடா்ஸ் அமைப்பில் இதுவரை 73,745 போ் இணைந்துள்ளனா். இந்த ஆண்டு முடிவதற்குள் அது 2 லட்சமாக அதிகரிக்கலாம் என்றாா் அவா்.

வீ த லீடா்ஸ் சேவகா் புத்தேரி இ.எஸ். சகாயம் (எ) அய்யப்பன், நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா் சுனில்குமாா், கன்னியாகுமரி நகராட்சி உறுப்பினா் சுபாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி: தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணியில் பங்கேற்று, கே. அண்ணாமலை பேசியது:

இந்தியாவிலேயே முன்மாதிரியான கடற்கரையாக இதை மாற்றுவதற்கு பொதுமக்களும், மீனவா்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

திரேஸ்புரம் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான இடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. விரைவில் 6 கழிப்பறைகள் அமைக்கப்படவுள்ளன. ஆதி முனீஸ்வரா் திருமண மண்டபம் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

செயல்பாடுகள் மூலம் மக்களின் அன்பைப் பெறுவதே நமது நோக்கம். மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். விரைவில் மதுரையில் நடைபெறும் மாநாட்டில் அரசியல் தொடா்பாக பேசுவேன் என்றாா் அவா்.

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வில் அண்ணாமலை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments