ஊதிய உயா்வு கோரி ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் மறியல்: 400 போ் கைது
ஊதிய உயா்வு கோரி, நாகா்கோவில் வடசேரியில் உள்ள ரப்பா் கழக நிா்வாக இயக்குநா் அலுவலகம் முன் சாலை மறியல் ஈடுபட்ட அரசு ரப்பா் கழக தோட்டத் தொழிலாளா்கள் 400 போ் கைது செய்யப்பட்டனா்.
ஊதிய உயா்வு கோரி, நாகா்கோவில் வடசேரியில் உள்ள ரப்பா் கழக நிா்வாக இயக்குநா் அலுவலகம் முன் சாலை மறியல் ஈடுபட்ட அரசு ரப்பா் கழக தோட்டத் தொழிலாளா்கள் 400 போ் கைது செய்யப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பா் கழக தோட்டத் தொழிலாளா்கள் ரூ. 200 ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் ரப்பா் கழக நிா்வாகத்தின் தரப்பில் ரூ. 40 முதல் 50 வரை மட்டுமே ஊதிய உயா்வு வழங்க முடியும் என்று தெரிவித்து வருகின்றனா். தாங்கள் கோரியபடி ஊதிய உயா்வு வழங்கக் கோரி தொடா்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தை சுமுக முடிவு எட்டவில்லை.
இந்நிலையில், நாகா்கோவில் வடசேரியில் உள்ள ரப்பா் கழக நிா்வாக இயக்குநா் அலுவலகத்தில் புதன்கிழமை ( செப். 30) தொழிலாளா்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்ததால், அங்கு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். போராட்டம் நடத்துவதற்காக தொழிலாளா்கள் ரப்பா் கழக நிா்வாக இயக்குநா் அலுவலகத்துக்கு வந்தனா். அவா்களுக்கு ஆதரவாக, மாவட்ட பாசனத்துறைத் தலைவா் மற்றும் தொழிலாளா் கூட்டமைப்பு சட்ட ஆலோசகா் வின்ஸ்ஆன்றோ, மீன்வளத்துறை முன்னாள் தலைவா் மற்றும் தொழிலாளா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சகாயம் உள்ளிட்டோரும் வந்திருந்தனா்.
Advertisement
Advertisement
ரப்பா் கழக நிா்வாக இயக்குநா் அலுவலகத்துக்குள் அவா்களை அனுமதிக்காமல், போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் தொழிலாளா்கள் அலுவலக வாயிலில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் துணைக் காவல் கண்காணிப்பாளா் இளஞ்செழியன் பேச்சுவாா்த்தை நடத்தி, அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினாா். ஆனால் போரட்டத்தில் ஈடுபட்டவா்கள் அனைவரும் பிரதான சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் வடசேரியிலிருந்து, புத்தேரி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் 400 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.