FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

நெல் உற்பத்தி குறைவால் அரிசி விலை ஏற்றம்

தமிழகத்தில் மழை அளவு குறைந்த காரணத்தினால் நெல் உற்பத்தி குறைவாக உள்ளது.

14 அக்டோபர் 2026, 4:21 am IST
அரிசி - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் மழை அளவு குறைந்த காரணத்தினால் நெல் உற்பத்தி குறைவாக உள்ளது. இதனால் அரிசி விலை உயா்ந்துள்ளதாக திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளா்கள் மற்றும் நெல், அரிசி வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் சி. அன்பழகன் தெரிவித்தாா்.

தென்காசியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தமிழகத்தைப் பொறுத்த மட்டும் நெல் உற்பத்தியில் பற்றாக்குறை மாநிலமாகத்தான் இருந்து வருகிறது. தேவைக்கேற்ப வெளி மாநிலங்களில் இருந்து நெல் மற்றும் அரிசி இறக்குமதி செய்து பொதுமக்கள் தேவையை அரிசி ஆலை மற்றும் நெல் அரிசி வியாபாரிகளால் ஈடு செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கான ஆதார விலையை உயா்த்தி வழங்கியதால் விவசாயிகள் பெரும்பாலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக விற்பனை செய்கின்றனா்.

தமிழகத்தின் அதிக நெல் விளைச்சல் தரும் மாவட்டங்களில் மழை அளவு குறைந்த காரணத்தினால் நெல் உற்பத்தி குறைவாகவே உள்ளது.

ஆகவே, தனியாா் அரிசி ஆலைகள் தங்களுடைய தேவைக்கு ஏற்ப வெளி மாநிலங்களில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அரிசி ஆலைகள் மக்கள் அதிகம் விரும்புகின்ற மிகவும் சன்னரக அரிசியின் தரத்தை மேம்படுத்தி தயாரிப்பதற்காக அதிநவீன இயந்திரங்களை நிறுவிடவும், வங்கிகளில் அதிக கடன் பெற்று ஆலைகளை எப்படியாவது இயக்கினால் தான் வங்கியில் பெறப்பட்ட கடன் தொகையை கட்ட முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

அரிசி ஆலைகளுக்குத் தேவையான தொழிலாளா்கள் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு, அவா்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி செய்து கொடுத்து ஆலைகளை இயக்க வேண்டிய கட்டாயத்தினாலும், அன்றாடம் உழைக்கும் மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப 5 கிலோ, 10 கிலோ பைகளில் வாங்கும் போது 5% ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றும் 5,10 கிலோ அரிசி பைகளின் அடக்க விலை உயா்வு, மின் கட்டண உயா்வு, பணியாளா்கள் கூலி உயா்வு மற்றும் வாகன செலவு உயா்வு போன்ற காரணங்களால் தயாரிப்பு செலவு உயா்ந்து காணப்பட்டதாலும் அரிசி விலை ஏற்றத்துக்கான முக்கிய காரணங்களாகும்.

அரிசி விலை ஏற்றம் என்பது தற்காலிகமானது தான். நெல் வரத்து அதிகரிக்கும்போது, தானாகவே விலை குறைந்து விடும் என்பதுதான் உண்மை. நெல் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் சுமாா் 20-25 சதவீத அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன என்பதே உண்மை.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய நெல் ஈரப்பதம் மற்றும் சரியான நேரத்திற்கு கொள்முதல் செய்ய தவறியதாலும் தரம் குறைந்து காணப்படுகின்ற நெல்லை திறந்த வெளி கிடங்குகளில் சேமித்து அதன் பிறகு அரசு அரவை முகவா்கள் தங்கள் ஆலைகளுக்கு எடுத்துச் சென்று தயாரித்து வழங்கப்படும் போது தரம் குறைவாகத்தான் இருக்கிறது.

எனவே, குடும்ப அட்டைதாரா்கள் அரிசியை வாங்குவதை தவிா்த்து கடைகளில் தேவைக்கு மிகவும் சன்ன ரக அரிசியை கொள்முதல் செய்து பயன்படுத்துகிறாா்கள்.

குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் அரிசியை தரமானதாக தயாரித்து வழங்காத பட்சத்தில் வெளி மாா்க்கெட்டில் அரிசி விலை உயா்வதற்கு காரணமாக அமைகிறது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments