FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மத்திய அரசின் அணுகுமுறையால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: காங்கிரஸ் செயலர் குற்றச்சாட்டு

மத்திய அரசின் அணுகுமுறையால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் சஞ்சய் தத் குற்றம்சாட்டினார்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

மத்திய அரசின் அணுகுமுறையால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் சஞ்சய் தத் குற்றம்சாட்டினார்.
திருநெல்வேலி மாநகர், மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரஃபேல் போர் விமான ஊழலைக் கண்டித்து திருநெல்வேலி சந்திப்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார்.  திருநெல்வேலி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலரும், தமிழக பொறுப்பாளருமான சஞ்சய் தத் பேசியதாவது:
சுதந்திரப் போராட்டத்துக்கான முதல் முழக்கம் திருநெல்வேலி மண்ணில் பிறந்த பூலித்தேவனால் எழுப்பப்பட்டது. அதேபோன்று பிரதமர் மோடியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற முழக்கத்தை இங்கிருந்து தொடங்குகிறேன். 
கடந்த 4 ஆண்டுகளில் மோடி அரசால் மக்கள் பல்வேறு துயரங்களையும், வேதனைகளையும் அடைந்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்றவில்லை. மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அதை அவர் செய்தாரா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காய்கறி, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என பாஜக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. ஆனால் விலை குறைந்ததா? நாட்டு மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார் மோடி. அவருக்கு வரக்கூடிய தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.
ஆட்சிக்கு வந்தபோது ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்போம் என்றார் மோடி. ஆனால் இப்போது மிகப்பெரிய அளவில் ரஃபேல் போர் விமான ஊழல் நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில்,  ரஃபேல் போர் விமானம் ஒன்றுக்கு ரூ.560 கோடி என விலை நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அதே விமானத்தை இப்போது ரூ.1,680 கோடிக்கு வாங்குவதற்கு பாஜக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஊழல் பணமெல்லாம் அம்பானி, அதானி மற்றும் கோடீஸ்வரர்களின் பைகளுக்கு செல்கிறது. மக்கள் விரோதக் கொள்கை, தமிழகத்துக்கு எதிரான அணுகுமுறையை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. இதனால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் கட்சியைப் பலப்படுத்தி தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர பாடுபட வேண்டும் என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுடலையாண்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் செல்லக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வசந்தகுமார், முன்னாள் மக்களவை உறுப்பினர் ராமசுப்பு, மாநில செயலர் வானுமாமலை, மாவட்ட பொதுச் செயலர் சொக்கலிங்ககுமார், பொருளாளர் ராஜேஷ்முருகன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments