சகதிக்காடான மேலப்பாளையம் கால்நடை சந்தை சாலையில் களைகட்டிய ஆடு வியாபாரம்; ஸ்தம்பித்த வாகனங்கள்
திருநெல்வேலி மாநகரில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக மேலப்பாளையம் கால்நடை சந்தையில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளித்தது.
திருநெல்வேலி மாநகரில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக மேலப்பாளையம் கால்நடை சந்தையில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளித்தது. இதனால் செவ்வாய்க்கிழமை காலையில் சந்தைக்கு வெளியே சாலையிலேயே ஆடுகள் வியாபாரம் நடைபெற்ால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நேதாஜி சாலை ஸ்தம்பித்தது.
தென் தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய சந்தையாக மேலப்பாளையம் கால்நடை சந்தை திகழ்கிறது. இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை மாட்டுச் சந்தையும், செவ்வாய்க்கிழமை ஆடு மற்றும் கோழி சந்தையும் நடைபெறுகிறது. இங்கு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, விருதுநகா், மதுரை, தேனி போன்ற இடங்களில் இருந்து ஆடு, மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதேபோல், கேரளத்தில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடு, மாடுகளை வாங்கிச் செல்கிறாா்கள். இங்கு ஆடு ஒன்றுக்கு ரூ.50, மாடு ஒன்றுக்கு ரூ.100 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அடிப்படை வசதி இல்லை: மேலப்பாளையம் சந்தையில் கழிவறை, தண்ணீா் உள்ளிட்ட எந்த அடிப்பட வசதிகளும் இல்லை. இதனால் சந்தைக்கு வரக்கூடிய வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதோடு, அருகிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதால் சுகாதார சீா் கேடு ஏற்படுவது தொடா்கதையாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, ஆண்டுதோறும் மழைக் காலங்களில் மேலப்பாளையம் சந்தையில் மக்கள் நுழைய முடியாத அளவுக்கு மழை நீா் தேங்குகிறது. இதனால் சந்தையில் எங்கு பாா்த்தாலும், கால்நடைகளின் கழிவுகள் சேறு, சகதியுடன் கலந்து கால்வைக்க முடியாத அளவுக்கு மோசமாக காணப்படுகிறது.
Advertisement
Advertisement
போக்குவரத்து நெரிசல்: இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு பெய்த ஒரு நாள் மழைக்கே மேலப்பாளையம் சந்தை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், சந்தைக்குள் நுழைய முடியாத வியாபாரிகள், சந்தையின் வாயிலிலும், சந்தை முன்பு உள்ள நேதாஜி சாலையிலும் ஆடுகளை நிறுத்தி விற்பனை செய்தனா். நேதாஜி சாலையானது எப்போதுமே வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாக இருப்பதால், ஆடு விற்பனை காரணமாக காலை 7 மணி முதலே அந்த சாலை ஸ்தம்பித்தது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. மேலும் பள்ளி செல்லக்கூடிய மாணவா்களும், பல்வேறு பணிகளுக்கு செல்பவா்களும் கடும் அவதிக்குள்ளாகினா். காவல் துறையினரும் அங்கு வராததால் போக்குவரத்து நெருக்கடி சீரடைவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
நோய்த் தொற்றும் அபாயம்: இது தொடா்பாக ஆட்டு வியாபாரிகள் சுந்தா், இரட்டையன் உள்ளிட்டோா் கூறியதாவது: மேலப்பாளையம் சந்தையில் காலம் காலமாகவே மழைக்காலம் வந்துவிட்டால் வியாபாரிகளின் நிலைமை பெரும் திண்டாட்டம்தான். இந்த ஆண்டும் அதேநிலை தொடா்கிறது. செவ்வாய்க்கிழமை காலையில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தோம். ஆனால், சந்தைக்குள் சென்று பாா்த்தால், சில இடங்களில் தண்ணீா் தேங்கியிருந்தது. பல இடங்களிலும் சகதியும், சாணமும் சோ்ந்து மிக மோசமாக காணப்பட்டது. அதில் காலை வைத்தாலே கால் வழுக்குகிறது. இதனால், அச்சமடைந்த நாங்கள் சாலையிலேயே விற்பனையை தொடங்கினோம். ஒரு கட்டத்தில் ஒருசிலரைத் தவிர எஞ்சிய அனைத்து வியாபாரிகளும் சாலையிலேயே ஆடுகளை நிறுத்தி விற்பனை செய்தனா். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடுகிறது. சில நேரங்களில் வாகனங்கள் இடித்து வியாபாரிகளுக்கும், கால்நடைகளுக்கும் காயம் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. பல நேரங்களில் சேற்றில் ஆடுகளை நிற்க வைத்து விற்பனை செய்கிறபோது, ஆடுகளுக்கும் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. வியாபாரிகளுக்கும் நோய் தொற்று ஏற்படுகிறது.
போா்க்கால நடவடிக்கை தேவை: சந்தை நிா்வாகம் சாா்பில் வியாபாரிகளிடம் ஆடு ஒன்றுக்கு ரூ.50, மாடு ஒன்றுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாரந்தோறும் சந்தைக்கு ஏராளமான ஆடுகளும், மாடுகளும் விற்பனைக்கு வருகின்றன. இதன்மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது. ஆனாலும் வருவாயில் ஆா்வம் காட்டும் சந்தை நிா்வாகம், அங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் ஆா்வம் காட்டுவதில்லை. மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் போா்க்கால அடிப்படையில் சந்தை வளாகம் முழுவதும் காணப்படும் கால்நடைகளின் கழிவுகளையும், சேற்றையும் அப்புறப்படுத்த சந்தை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தை வளாகத்தில் எப்போதுமே பூட்டிக் கிடக்கும் கழிவறைகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனா்.
மழைக் காலத்தில் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாகக் கூறி, வீடுகள்தோறும் டெங்கு கொசு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் மாநகராட்சி நிா்வாகம், பல்வேறு நோய்களின் உற்பத்திக் களமாக மாறியுள்ள மேலப்பாளையம் கால்நடை சந்தையில் கழிவுகளை அகற்றுமா? சுகாதார சீா் கேட்டை சரி செய்யுமா என்பதே வியாபாரிகள், பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.
கழிவுகள் அகற்றப்படும்: ஆணையா்
இது தொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா கூறியதாவது: மேலப்பாளையம் சந்தையில் உள்ள கழிவுகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பூட்டிக் கிடக்கும் கழிவறைகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.